மார்செய் உட்பட பத்து நகரங்களில் போதைப் பொருள் கடத்தல் குழுக்களை ஒடுக்க மாபெரும் களையெடுப்பு!
மாபியா கும்பல்களின் கோட்டைப் பகுதிக்கு மக்ரோன் திடீர் விஜயம்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
நகரங்களில் போதைப் பொருள் கடத்தல் குழுக்களைத் துடைத்தழிக்கும் பெருமெடுப்பிலான பொலீஸ் நடவடிக்கைகள்(“XXL” police operation) ஆரம்பிக்கப்படவுள்ளன என்ற தகவலை அரசுத் தலைவர் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார்.
அதிபர் மக்ரோன் நாட்டின் தென்பகுதி துறைமுக நகரமாகிய மார்செய்க்கு உள்துறை மற்றும் நீதி அமைச்சர்கள் சகிதம் நேற்றைய தினம் அறிக்கப்படாத திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
எதிர்பாராத இந்த விஜயத்தின் போது நீண்ட பல காலமாக போதைவஸ்துக் கடத்தல் மாபியா கும்பல்களின் சொர்க்கபுரியாகத் திகழும் La Castellane பகுதிக்குச் சென்றார் அரசுத் தலைவர், அங்கு பெரும் அச்சத்துடன் வசிக்கின்ற மக்களைச் சந்தித்துப் பேசினார். போதைப் பொருள் கடத்துபவர்கள், பேரம் பேசி விற்பவர்கள் உட்பட போதைவஸ்துக் கும்பல்களும் அவர்களது குடும்பங்களும் இனிமேல் புற நகரங்களில் வாழமுடியாத நிலைமை உருவாக்கப்படும் என்று அப்போது அறிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் கட்டுக்கடங்காத வன்முறைச் சம்பவங்களால் தினசரி கொலைகள் விழுகின்ற மார்செய் நகரம் உட்பட நாட்டின் பத்துப் பெருநகரங்களில் இதற்கு முன்பு ஒருபோதும் நடத்தப்படாத விசேட – விசாலமான – பெரும் பொலீஸ் படை நடவடிக்கை ஆரம்பமாகிறது. அது சில வாரங்களுக்குத் தொடரும் என்ற தகவலை மக்ரோன் அங்கு வைத்து வெளியிட்டார்.
மார்செய் நகரமும் அதன் புறநகரப் பகுதிகளும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றம், விற்பனை என்பவற்றால் மிக மோசமான சமூகப் பேரழிவை எதிர்கொண்டு வருகின்றன.
ஜூலை மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் சில விளையாட்டுக்கள் மார்செய் நகரத்திலும் நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாக அங்கே குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவரையும் அள்ளித தூக்குமாறு பொலீஸாருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்செய் நகரிலும் அண்டிய பகுதிகளிலும் சுமார் நான்காயிரம் பொலீஸார் மற்றும் சிறப்புப் படையினர் ஏற்கனவே தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
மக்ரோன் அங்கு செல்வதற்கு முன்பாக இடம்பெற்ற தேடுதல்களில் சுமார் நூறுபேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.