போட்டி இல்லாத தேர்தலில் ஐந்தாவது பதவிக்காலத்துக்குத் தெரிவானார் புடின்!

"ஆச்சரியம் ஏதுமில்லை""எதிர்பார்க்கப்பட்ட முடிவு"உலக அளவில் விமர்சனம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
ரஷ்யாவில் மூன்று தினங்கள் நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்களிப்பில் விளாடிமிர் புடின் 2030 ஆம் ஆண்டு வரையான அடுத்த ஐந்தாவது தவணைக் காலத்துக்கு அதிபராகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்படுகிறது.
ஆச்சரியப்பட ஏதுமற்ற தேர்தல் முடிவு இது என்று மேற்குலக செய்தி ஊடகங்கள் புடினின் வெற்றிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளன.
சுதந்திரமும் உண்மைத் தன்மையும் அற்ற தேர்தல் இது என்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற முக்கிய மேற்கு நாடுகளில் இருந்து கண்டனக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி விடுத்த செய்தியில் விளாடிமிர் புடினை அதிகார போதைமிகுந்த ஒரு மனிதர் என்றும் கடைசிவரை அதிகாரத்தில் தொடர விரும்புகின்றவர் என்றும் வர்ணித்திருக்கிறார்.
மூன்றாவது நாளான இன்றைய வாக்களிப்பு தினத்தின் முடிவில் ரஷ்ய நேரப்படி இரவு எட்டு மணிக்கு வெளியாகிய பூர்வாங்க முடிவுகளின் படி புடினுக்கு ஆதரவாக 87.34% வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புடின் தனது அரசியல் எதிராளிகளைத் தீர்த்துக் கட்டிவிட்டுப், போட்டியாளர்கள் எவருமற்ற ஒரு பகட்டான தேர்தலை நடத்தி எதிர்பார்க்கப்பட்டது போலவே அதிகாரத்தில் தொடர்வதை மறுபடியும் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்றவாறு கடும் விமர்சனங்கள் சர்வதேச அளவில்
வெளியாகியுள்ளன.
அதிபர் புடினுக்குச் சவாலான பிரதான அரசியல் எதிராளியாக விளங்கிய அலெக்ஸி நவால்னி சிறையில் மிக மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த சில வாரங்களுக்குப் பின்னர் நடந்த இந்தத் தேர்தலில் புடின் பெற்றுள்ள வெற்றி நாடுகடந்துவாழும் அவரது அரசியல் எதிராளிகள் பலராலும் அடாத்தான – மோசடியான-யதார்த்தத்துடன் தொடர்பில்லாத வெற்றி என்று மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.

இம்முறை தேர்தலில் புடினுடன் பிரபலமோ அரசியல் பலமோ ஏதுவமேயில்லாத வேறு மூன்று பேர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மிக அரிதான வாக்குகளுடன் தடயம் தெரியாமலே மறைந்துபோய்விட்டனர்.

71 வயதான புடின் 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக ரஷ்யாவின் அதிபராகத் தெரிவாகியிருந்தார். பின்னர் 2004 இல் மறுபடியும் தெரிவானார். 2008 இல் மூன்றாவது தடவையும் போட்டியிட முடியாத நிலையில் தனது அதிகாரத்தைத் தொடர்வதற்கு பிரதமர் திமித்ரிக்கு (Dmitri Medvedev) வழிவிட்டார். 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து வந்த தேர்தல்களில் மீண்டும் அமோக வாக்குகளோடு தனது சர்வாதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்ட அவர் இப்போது உலகப் போர் தொடர்பான பீதிகளுக்கு மத்தியில் ஐந்தாவது பதவிக்காலத்தையும் தன்வசமாக்கியுள்ளார்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">