உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும்-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்
இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்தவேண்டும் மனித உரிமை தராதரங்களை மதிக்கும் விதத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில்மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதே நாணயநிதியத்திற்கான கடிதமொன்றில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கையில் சிவில் சமூகத்தின் நடவடிக்கைகளை பெருமளவிற்கு கட்டுப்படுத்தும் நாட்டில் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நகல்சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நல்லாட்சி மற்றும் ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள் கண்காணிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்ற போதிலும் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் பல சமீபத்தைய நடவடிக்கைகள் சட்டங்களில் உத்தேச அரசசார்பற்ற அமைப்புகள் சட்டமும் உள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.