தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம்.

நடிகர் விஜய் விரைவில் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதமான பிரச்சினை வந்தாலும் அதை விஜய் பார்த்துக் கொள்வார் என்றார்.

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யை முதல்வராக்கும் வகையில் சிறப்பாக அனைவரும் செயல்பட வேண்டும்.

“விரைவில் அவர் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்க உள்ளார்,” என்றார் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக ஏழு வீடுகள் வழங்கப்பட்டன.

மிக விரைவில் மேலும் பலருக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அதற்கான பயனாளிகள் அடையாளம் காணப்படுவர் என்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்றாலும் தேர்தல் சமயத்தில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடாததால் அவர் தனது அரசியல் கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் தனது கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது.