தரைப்படைகள் தலையிட்டால் நிஜமான அணு ஆயுதப் போர் சாத்தியம்! புடின் எச்சரிக்கை!!
மேற்கு நாட்டு இலக்குகளை தாக்கியழிக்கும் ஆயுதங்கள் கைவசம் உண்டு என்கிறார்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மேற்கு நாடுகள் தங்களது சொந்தப் படைகளை உக்ரைனுக்கு அனுப்பினால் நிஜமான அணு ஆயுதப் போர் சாத்தியம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்த நாடுகளை எச்சரித்திருக்கிறார்.
மேற்கு நாடுகளது இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கக் கூடிய போராயுதங்களை ரஷ்யா கைவசம் வைத்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
ரஷ்ய நாடாளுமன்றத்துக்கும் நாட்டின் அரசியல் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் ஆற்றிய வருடாந்த உரையிலேயே புடின் மேற்குலகை இவ்வாறு எச்சரித்திருக்கிறார்.
உக்ரைன் மீதான படை நடவடிக்கை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே ரஷ்ய அதிபரது இந்த உரை வெளியாகி இருக்கின்றது என்று மொஸ்கோவில் உள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புடின் தனது உரையில் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு :
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலவீனப்படுத்துவதில் குறியாக உள்ளன, ரஷ்யாவின் சொந்த உள் விவகாரங்களில் தலையிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அவர்களது எல்லைகளில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன என்பதை உணரவேண்டும். அவர்களது தலையீடுகள் அனைத்துமே மனித நாகரீகத்தையே அழிக்கவல்ல அணு ஆயுதங்களின் பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது. அது அவர்களுக்குப் புரியவில்லையா? -இவ்வாறு புடின் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரான்ஸின் அதிபர் மக்ரோன் நேட்டோவின் ஜரோப்பிய உறுப்பு நாடுகள் தங்களது தரைப்படையை உக்ரைனுக்கு அனுப்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்ற சாரப்பட பரபரப்பான கருத்தை வெளியிட்ட ஓரிரு தினங்களிலேயே மேற்குடனான அணு ஆயுத மோதல் பற்றிய இந்த எச்சரிக்கை புடினிடம் இருந்து வந்திருக்கிறது.
71 வயதான அதிபர் புடின், மார்ச் 15-17 திகதிகளில் நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் மேலும் ஆறு வருடங்களுக்கு அதிபராகத் தெரிவாகுவது நிச்சயமான ஒன்றாகும்.
இந்த நிலையில் ரஷ்யா வசம் உள்ள- நவீன முறைகளில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட – அணு ஆயுதங்கள் உலகிலேயே மிகப் பெரியவை என்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, அதிபர் புடினின் மிக முக்கிய அரசியல் எதிர்ப்பாளராக விளங்கிய அலெக்ஸி நவால்னியின் (Alexey Navalny) உடல் இன்று வெள்ளிக்கிழமை மொஸ்கோவில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவர் ரஷ்யாவின் வட துருவ வட்டகையில் உள்ள ஒரு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தமை தெரிந்ததே.