நடிகை மீரா மிதுன் தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீன் பெற்ற இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் மட்டும் ஆஜராகியிருந்தார்.
இதனால் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஶ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்த போது மீரா மிதுன் எங்கு உள்ளார் என்று தேடி வருவதாகவும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் விரைவில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 14-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.