நிகழ்நிலைக் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை-அமைச்சர் சப்ரி
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்கண்ட விடயத்தினை எடுத்துரைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போலியான தகவல்கள், வெறுப்புப்புப்பேச்சுக்கள், உள்ளிட்ட சமூக ஊடகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முரண்பாடான விடயங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கக் கொண்டே நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த சட்டத்தில் காணப்படுகின்ற சில உட்பிரிவுகள் சம்பந்தமாக பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தமது கரிசனைகளை வெளிப்படுத்தினார். அதன்போது அரசாங்கம் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை தெளிவு படுத்தியுள்ளேன்.
விசேடமாக, குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சிவில் அமைப்புக்களின் பரிந்துரைகளையும் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையையும் அவருக்கு எடுத்துரைத்தேன் என்றார்.