அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற் கட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்டாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அந்த வேலைத்திட்டத்தினால் விவசாய தேவைகளுக்கும், குடிநீர் தேவைகளுக்கும் தீர்வு கிடைக்குமெனவும் தெரிவித்த ஜனாதிபதி அதுகுறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தினார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டத்தை இன்று (15) முற்பகல் மக்கள் பாவனைக்காக கையளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் அவதியுறும் மதவச்சி, பதவிய, கெபித்திகொல்லேவ, ஹொரோவபொத்தான, கஹட்டகஸ்திகிலிய பிரதேச மக்களுக்கு தூய குடிநீர் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 11,515 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டம், அனுராதபுரம் மஹா கனதராவ குளத்தை பிரதான நீராதாரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் கீழ் ரம்பேவ மற்றும் மதவச்சி பிரதேச செயலகப் பிரிவுகளின் 75 கிராம சேவைப் பிரிவுகளின் 25,000 குடும்பங்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது.
அரசாங்கத்திற்காகவோ எதிர்கட்சிக்காகவோ அன்றி மக்களின் சுபீட்சமான வாழ்விற்காக ஒன்றிணையுமாறு மீண்டும் அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இதுவரை பல பணிகளைச் செய்துள்ளோம். ஆனால் நாம் இன்னும் கடன் சுமையில் இருந்து விடுபடவில்லை. கடன் தொடர்பில் ஓரளவு சலுகை கிடைத்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்த மேலும் 20 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவான பொருளாதார மாற்றத்தை நாம் ஏற்படுத்தாவிட்டால், அந்த கடன்களை செலுத்த மேலும் அதிகளவான கடன்களைப் பெற வேண்டியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கே நாம் முதலில் நடவடிக்கை எடுத்தோம். இன்று நாட்டில் ஸ்திரத்தன்மை உள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்பட்டுள்ளது. அரசை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பேரணிகளை நடத்தலாம். அந்த ஸ்திரத்தன்மை இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மக்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்காக நெல் பயிரிட அமெரிக்காவிலிருந்து உரம் வழங்கப்பட்டது. 2022, 2023 பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் இருந்து எமக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. மக்களுக்கு அரிசி, மா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினோம்.
மூன்றாவது இருந்தது காணி வழங்குவதாகும். அதற்காக உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். அத்துடன் கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த மக்களுக்கு வழங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் நாம் தனிப்பட்ட அரசியல் செயற்பாடுகளை வெவ்வேறாக முன்னெடுப்போம். தேர்தலின் பின்னர் ஒற்றுமையாகச் செயற்படுவோம். அவ்வாறான முறைமையிலேயே நாம் செயற்பட வேண்டும். நாம் பிரிந்திருந்தால் கிராம மக்களுக்கு எந்த நலனும் கிடைக்காது. இன்றும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம் என்றே கூறுகிறேன். அரசாங்கத்திற்காகவும் எதிர்கட்சிக்காகவும் ஒன்றுபடுங்கள் என்று கூறவில்லை. மக்களுக்காக ஒன்றுபடுவோம் என்றே அழைக்கிறேன். அனைவரும் ஒன்றுபடுவதால் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவத்துள்ளார்.