யாப்பின் பிரகாரம் தமிழரசுக்கட்சியின் தலைவராக சிறிதரன் தெரிவானது குறித்து எழும் கேள்விகள்.
தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுச் செயலாளருக்கான தேர்தலில் 320 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆகவே மேலதிகமாக வாக்களித்த உறுப்பினர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள். இந்த உறுப்பினர்களின் அதிகரிப்பு தொடர்பாக யாப்பில் குறிப்பிடப்படாததன் நோக்கம் தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டே பொதுச்சபைக் கூட்ட முடிவுகள் யாப்பிற்கு முரணானவை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பொதுச்சபையைக் கூடுவதற்கான விதி முறைகள் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளன.இந்த மனுவை பரிசீலைனைக்கு உட்படுத்திய நீதிபதி, கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதேவேளை யாப்பின் பிரகாரம் சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் சரியானதா அல்லது முரணானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஏனெனில் குறித்த மனுவில் கட்சி தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் எதிராளியாக காண்பிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதாவது பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமும், அதற்கு முன்னதாக இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பும் யாப்பு விதிகளுக்கு முரணானவை என்ற பொருள் விளக்கம் மனுவில் இருப்பதாக திருமலை நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கினறன. தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் சிறிதரனுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 184, சுமந்திரனுக்கு 137 வாக்குகள். ஆகவே இங்கும் வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதாவது மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9 பேரும், தொகுதிவாரியாக 280 பேர் உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர்.
ஆனால் 321 பேர் வாக்களித்துள்ளனர்.இந்தநிலையில் பொதுச் செயலாளர் தெரிவில் பொதுச்சபைக் கூட்ட எண்ணிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் சிறிதரனின் தலைமைப்பதவி தெரிவிலும் சட்ட விளக்கங்கள் எழுகின்றன.ஆகவே நீதிமன்ற விசாரணையில் சிறிதரனின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பும் யாப்பிற்கு முரணானதா அல்லது இல்லையா என்ற வாதங்கள் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.