இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை யாழ்ப்பாண நீதிமன்றங்கள் இடைக்கால தடைவிதித்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால தடைவிதித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார். இதேவேளை, தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் இன்றையதினம் வியாழக்கிழமை வழக்குதாக்கல் செய்யப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.