அநுரகுமார இலங்கை திரும்பியதும் டில்லிக்கு செல்லத் தயாராகும்  ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டது. இருநாட்டு அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டதாக அறிவிப்புகள் வெளியாகின.

ஜே.வி.பியை டில்லி அழைத்து நடத்தியுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களையும் புதுடில்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அழைப்பை விடுத்துள்ளதாக தெரிய வருகிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இலங்கை திரும்பிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் டில்லிக்கு செல்ல உள்ளனர்.தேசிய மக்கள் சக்திக்கு விடுக்கப்பட்ட அழைப்பை போன்று ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதிகாரப்பூர்வ பயணத்துக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டுமென அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த பின்புலத்திலேயே இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்கட்சித் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட சில முக்கிய தலைவர்கள் இந்த பயணத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்துக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து தமக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இந்தியாவின் அரசியல் நகர்வு ஆளும் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.