சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்து அமெரிக்க திட்டம்.
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரி ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே இந்த உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவிக்கின்றன. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த கூட்டுக் கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்து அமெரிக்க இராஜதந்திரி பரிந்துரை வழங்கியிருக்கின்றார்.
அத்துடன் ‘திருகோணமலையை மையப்படுத்திய அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அதற்கு இணங்கினால் ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அமெரிக்க இராஜதந்திரியின் உரையாடல் தொனி அமைந்ததாகவும்’ அந்த உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுடன் மிகச் சமீபகாலமாக முரண்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புவிசார் அரசியல் நோக்கில் தமக்கு ஆதரவான ஒருவரை வேட்பாளராக நியமிக்க தீவிர முயற்சியெடுத்து வருகின்றது. இப்பின்னணியிலேயே இந்த தொலைபேசிய உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. சஜித் பிரேமதாசவிற்கு அமெரிக்கா ஆதரவென்று கூறமுடியாது. ஆனாலும், ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ரணில் மற்றும் சஜித் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகின்றதோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.