“சிமிக்”அடிப்படைச் சம்பளத்தை அரசு மறுசீரமைக்கும்! வாரத்தில் நான்கு வேலை நாள்கள் பரிசீலிக்கப்படும்!
பிரதமர் அட்டால் அறிவிப்பு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
அடிப்படைச் சம்பளத்தை(SMIC) விரைவில் அரசு மறுசீரமைக்கும். அடுத்த நிதிச் சட்டப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற சமயத்தில் இந்த மறுசீரமைப்பைத் தொடங்குவோம்.
அண்மையில் நியமிக்கப்பட்ட இளம் பிரதமர் கப்ரியேல் அட்டால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தனது கொள்கை விளக்க உரையை ஆற்றிய போது இவ்வாறு அறிவித்திருக்கிறார்.
நாட்டில் இந்த அடிப்படை ஊதியம் தொடர்பாக ஒரு “முரண்பாடு” காணப்படுகிறது. அயல்நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸில் அடிப்படைச் சம்பளத் தொகை அதிகம் ஆகும். ஆனாலும் ஏனைய அந்த நாடுகளை விடவும் மிக அதிகமான தொழிலாளர்கள் இங்கு அந்த அடிப்படை ஊதியத்தைப் பெற்று வாழ்கின்ற நிலை காணப்படுகிறது. இதனைச் சீரமைக்கவுள்ளோம். அடுத்த நிதி மசோதாவில் இருந்து அதனைத் தொடங்குவோம் – என்று பிரதமர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
அடிப்படை ஊதியம் எவ்வாறு, எவ்வளவு தொகையில் அதிகரிக்கப்படும் என்ற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
பிரான்ஸில் “சிமிக்”(salaire minimum de croissance) எனப்படுகின்ற ஆகக் குறைந்த அடிப்படை ஊதியத் தொகை நீண்ட காலமாகக் குறிப்பிடக் கூடிய அதிகரிப்பு எதுவும் இல்லாமல் அதன் மூலம் சராசரி வாழ்க்கையைக் கூடக் கொண்டுநடத்த முடியாதவாறு அடிமட்ட நிலையில் இருந்துவருகிறது. அதனை அதிகரிக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கைகள் தொழிலாளர் மத்தியில் மிக நீண்ட காலமாக எழுப்பப்பட்டுவருகிறது.
நான்கு நாள் வேலை
இதேவேளை, பிரதமர் தனது கொள்கை உரையில் நாட்டில் அரச ஊழியர்களது பணி நேரம் தொடர்பான தகவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
வாரத்தில் வேலை நாட்களது எண்ணிக்கையை ஐந்தில் இருந்து நான்காகக் குறைப்பது தொடர்பில் பிரதமர் அரசின் பச்சைக் கொடியைக் காட்டியிருக்கிறார். அமைச்சுக்களின் கீழ் உள்ள நிர்வாகப் பிரிவுகளில் “நான்கு வேலை நாள்களைப் ” (4-day week) பரிசோதித்துப் பார்க்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டிருக்கிறார்.
“தொழிலுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவி வந்த உறவு மாறிவிட்டது” – என்பதை ஏற்றுக் கொண்ட பிரதமர் அட்டால்,ஆயினும் “எங்கள் நாட்டில் யாரும் சோம்பேறிகளாக இருப்பதற்கான உரிமையைக் கோரவில்லை “என்பதையும் உறுதிப்படுத்தினார்.
ஐரோப்பாவில் வேறு சில நாடுகளிலும் இவ்வாறு வேலை நாட்களைக் குறைக்கின்ற திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.