தமிழரசுக் கட்சி பொதுக் கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு.
தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதாக கட்சியின் திருமலை முக்கியஸ்தர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் என்பவரே குறித்த பொலிஸ் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்
தானும் கட்சியின் மற்றொரு பொதுக்குழு உறுப்பினரான தர்சன் என்பவரும் கட்சியின் செயலாளராக குகதாசன் நியமிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்த போது, அவரின் ஆதரவாளர்கள் தங்கள் இருவரையும் தாக்கியதாக திருமலை நவம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபரான விஷ்ணுவர்த்தன் உள்ளிட்டோரே தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் பொது மற்றும் மத்தியக் குழு கூட்டம் திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது.
அண்மையில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்டதுடன், கட்சியின் ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் நேற்று தெரிவுசெய்யப்படவிருந்தனர்.
கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவுசெய்யப்பட்ட போதிலும், நேற்றைய தெரிவுகள் எதுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக இன்று இடம்பெறவிருந்த கட்சியின் தேசிய மாநாடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.