முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றதுடன், இது தொடர்பில் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு வழங்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதியும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

எவ்வாறாயினும், கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 50 சதவீத பெரும்பான்மை பலத்தையும் பங்காளிக் கட்சிகளுக்கு 50 சதவீத அதிகாரத்தையும் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கூட்டணியில் தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கவும், கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஏற்ப தலைமைத்துவ சபைக்கு உறுப்பினர்களை உள்வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி சு.கவின் பாரம்பரிய சின்னங்களாக கருதப்படும் வெற்றிலை சின்னம் அல்லது நாற்காலி சின்னத்தை தேர்வு செய்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்துள்ளது.

சு.கவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க இடையில் இணக்கப்பாடுகள் எட்டினால்தான் கூட்டணி இறுதிவடிவம் பெறும் எனவும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.