இந்தியாவின் குடியரசு விழாவில் மக்ரோன் பங்கேற்பு.

ஜெய்ப்பூரில் அரச மரியாதை இருதரப்பு உறவில் நெருக்கம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

அதிபர் எமானுவல் மக்ரோன் ஜனவரி 26, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்தியாவின் 75 ஆவது குடியரசு நாள் விழாவில் பிரதம விருந்தினராகப் பங்குகொள்கிறார். புதுடில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் அவருக்கு வியாழக்கிழமை அரச மரியாதைகளுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கு இரு நாட்டுத் தலைவர்களது வாகன பவனியும் அங்குள்ள புராதன அரச மாளிகை ஒன்றில் மக்ரோனுக்கு விருந்துபசாரமும் இடம்பெறவுள்ளன.

இந்தியா ஓகஸ்ட் 15, 1947 இல் சுதந்திரம் பெற்றது. எனினும் அது கொலனி ஆதிக்கங்களில் இருந்து முற்றாக விடுபட்டு அங்கு குடியாட்சி அரசமைப்பு நடைமுறைக்கு வந்த நாளே ஐனவரி 26 ஆகும். அந்தநாள் ஆண்டுதோறும் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்தியாவின் தெற்குக் கரையோரப் பகுதியாகிய பாண்டிச்சேரியை 1674 முதல் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரான்ஸ், இந்தியா சுதந்திரம் பெற்று ஏழு ஆண்டுகள் கழித்து 1954 இல் அங்கிருந்து வெளியேறியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அடுத்தே மக்ரோன் குடியரசு விழாவில் பங்கேற்க புதுடில்லி செல்கின்றார் என்பதை எலிஸே மாளிகை அறிவித்திருக்கிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாகக் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த பிரான்ஸின் சுதந்திர தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் என்பது தெரிந்ததே. பதிலுக்கு இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்கவருமாறு பிரதமர் மோடி அச்சமயம் அதிபர் மக்ரோனிடம் நேரில் அழைப்பு விடுத்திருந்தார்.

மக்ரோனின் இந்த டில்லி விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இவ்வாறான சமீப கால நிகழ்வுகள் இந்தியாவும் பிரான்ஸும் ராஜதந்திர உறவுகளில் மிக வேகமாக நெருங்கி வருவதன் அறிகுறியே என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">