தென்னிந்திய நடிகைகளை அழைத்துவந்து சர்ச்சையில் சிக்கிய ஜீவன் தொண்டமான்.

ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார்.

அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த போதிலும்இ இந்த தென்னிந்திய கலைஞர்கள் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி நிதியுதவி செய்தார்களா? என்று அவரைக் கேள்வி எழுப்பும் அவரது அரசியல் எதிரிகளின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகியுள்ளார்.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் இவ்வேளையில், ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய பொங்கல் விழாவை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாட நடவடிக்கை எடுத்தார்?

என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் லெட்சுமணர் சஞ்சய் கேள்வியெழுப்பியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ளதோடு, பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றனர். மக்கள் 100, 000 க்கும் அதிகமான வாக்குகளை அளித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொடுத்தனர். ஆனால், இவ்வாறான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகைகளை அழைத்து வருகிறார் ஜீவன் தொண்டமான். வருகைக்கான பணம் எங்கிருந்து வந்தது? இவ்வாறு மக்களின் பணத்தை வீண் விரயம் செய்தமைக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜீவன் தொண்டமான் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகைகளை அழைப்பதற்கு பதிலாக, உள்ளூர் கலைஞர்களை கலந்துகொள்ள ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.