உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : எதிராக வாக்களித்தது தமிழசுக் கட்சி.


உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் சமூக ஊடகங்களை கடுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது. அதனால்தான் திருத்தங்களுக்கு உட்படுத்தாது உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முற்படுகிறது என இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த விவாதம் சட்டத்துக்கு முரணானது. பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கும் முரணானது. இந்தவொரு சட்டமாக இருந்தாலும் அது துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதிக்கப்பட வேண்டும்.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் ஏற்கனவே, விவாதிக்கப்பட்டது அல்ல. எமது கருத்துகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டால் வாக்கெடுப்பின்றி இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஏன் இதனை அவசரமாக நிறைவேற்ற முற்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டே சட்டமூலம் நிறைவேற்றப்படும் என கட்சித் தலைவர் கூட்டத்தில் அமைச்சரை் டிரான் அலஸ் கூறினார். ஆனால், தற்போது அவசர அவசரமாக நிறைவேற்ற முற்படுகின்றனர். அவ்வாறெனின் இது குறைப்பாடுகள் உள்ள சட்டம் என்பதே அர்த்தம். உத்தேச சட்டத்தில் உள்ள 56 சரத்துகளில் 35 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அவற்றை திருத்தங்களுக்கு உட்படுத்த வேண்டும். அதனையே நாம் வலியுறுத்துகிறோம்.

அரசாங்கம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கும் இந்தச் சட்டத்தை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள என்பது தெளிவாக தெரிகிறது.’ என்றார்.  உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறும் எதிர்க்கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டதன் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் விவாதத்தை நடத்த 83 எம்.பிகள் ஆதரவாகவும் 50 எம்.பிகள் எதிராகவும் வாக்களித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பிகளும் விவாதத்தை நடத்துவதற்கு எதிராகவே வாக்களித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.