டென்மார்க்கின் புதிய மன்னர் முறைப்படி முடி சூடினார்!
தலைநகர் கொபனேஹனில் சனத் திரள்!! வாணவேடிக்கை
Kumarathasan Karthigesu-பாரிஸ்
டென்மார்க் அரச குடும்பத்தின் வரலாற்றில் இன்று ஓர் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் முடிக்குரிய இளவரசராக விளங்கிய பத்தாவது ஃபிரடெரிக் (Crown Prince Frederick) புதிய மன்னராக முடி சூடிக்கொண்டார்.
52 ஆண்டுகள் ராணியாக விளங்கிய தாயார் மகாராணி மார்கிரேத்(Queen Margrethe) பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்தே இளவரசர் ஃபிரடெரிக் முறைப்படி மன்னராகப் பதவியேற்றிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கொப்பனேஹனில் அமைந்துள்ள கிறிஸ்ரியன்ஸ்போர்க் கோட்டை அரண்மனையில் (Christiansborg Castle) மன்னரது பதவியேற்பு வைபவம் நிகழ்ந்த சமயத்தில் கோட்டைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு புதிய மன்னரை வரவேற்றிருக்கின்றனர்.
கோட்டை அரண்மனையின் மேல் தளத்தில் பதவியேற்பு நிகழ்ந்த போது மன்னர் பத்தாவது ஃபிரடெரிக் நீடூழி வாழ்க என்று மூன்று தடவைகள் கோஷம் எழுப்பப்பட்டது. அச்சமயம் நாட்டின் பிரதமர் மெற்ற ஃபிரெடெரிக்ஸன் புதிய மன்னரை டென்மார்க், கிறீன்லாந்து மற்றும் ஃபரோ தீவுகள் (Denmark, Greenland and Faroe Islands) ஆகியவற்றுக்கான மன்னராக முறைப்படி அறிவித்தார்.
இன்றைய பதவியேற்பு வைபவத்தில் மன்னர் ஃபிரடெரிக்கின் ஆஸ்திரேலியாவில் பிறந்த துணைவியார் மேரி (Queen Consort Mary) மற்றும் புதல்வர் முடிக்குரிய இளவரசர் கிரிஸ்ரியன் (Crown Prince Christian) அவரோடு ஏனைய மூன்று பிள்ளைகளும் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் இருந்து அரச குடும்பப் பிரதிநிதிகள் எவரும் இன்றைய வைபவத்துக்கு அழைக்கப்படவில்லை.
இன்றைய அரச குடும்ப வைபவம் முக்கியத்துவம் குறைந்த ஒரு நிகழ்வாகவே கருதப்படினும் மகாராணி க்குப் பிரியாவிடை கூறுவதற்காக வீதிகளில் திரண்டவர்களால் தலைநகரம் மக்கள் கடலாகக் காட்சியளித்தது என்று செய்தி ஊடகங்கள் வர்ணித்தன. பதவியேற்பை ஒட்டி முன்னிரவு நடந்த கண்கவர் வாண வேடிக்கை நிகழ்வு தலைநகரைப் பெரும் விழாக்கோலமாக்கியது.
பதவியைத் துறந்துள்ள 83 வயதான மகாராணி மார்கிரேத் அம்மையார் ஜனவரி 14, 1972 இல் அன்றைய மன்னரும் அவரது தந்தையுமாகிய ஒன்பதாவது ஃபிரெடெரிக்கின் (King Frederik IX) மறைவை அடுத்து நாட்டின் மகாராணியாகப் பதவியேற்றிருந்தார்.
நீண்ட 52 ஆண்டுகள் பதவியில் நீடித்த அவர் உயிர்துறக்கும் வரை பதவியில் இருப்பேன் என்று கூறிவந்தார். ஆனால் எதிர்பாராத விதமாகப் பதவி விலகும் விருப்பத்தை அவர் கடந்த டிசெம்பர் 31 ஆம் திகதி தனது புத்தாண்டுச் செய்தியில் நாட்டுக்கு அறிவித்திருந்தார்.
டெனிஷ் அரச பரம்பரை வரலாற்றில் கடந்த 800 ஆண்டுகளின் பின்னர் சுயவிருப்பத்தின் பேரில் பதவியில் இருந்து விலகிக் கொண்ட மகாராணியாக மார்கிரேத் அம்மையார் குறிப்பிடப்படுகிறார். பொதுவாக அரசர் அல்லது மகாராணி உயிர்துறக்கின்ற வரை பதவியில் நீடிப்பது வழக்கமாகும். அதன் பின்னரே புதியவர் முடிசூடிக் கொள்வது மரபு.