34 வயதில் நாட்டின் இளம் பிரதமராக அட்டால் பதவியேற்பு!
வெளிப்படையான முதல் ஓரினச்சேர்க்கையாளர் அரசின் உயர் பதவியில்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
எதிர்பார்க்கப்பட்டவாறு அதிபர் மக்ரோன், வளர்ந்துவரும் இளம் அரசியல் பிரமுகர் கப்ரியேல் அட்டாலைப்(Gabriel Attal) புதிய பிரதமராக நியமித்திருக்கிறார்.
எலிஸே மாளிகை இதனை இன்று அறிவித்திருக்கிறது. பெரும்பான்மை பலம் அற்ற மக்ரோனின் அரசு நாடாளுமன்றத்தில் நாட்டின் வலது, இடது சாரிக் கட்சிகளின் கடுமையான அரசியல் நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்துவருகின்ற நெருக்கடியான ஒரு கட்டத்தில் புதிய பிரதமரது நியமனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடைசியாக எலிசபெத் போர்னின் அமைச்சரவையில் தேசிய கல்வி அமைச்சராகப் பதவி வகித்துவந்த அட்டால் இன்று பிற்பகல் பிரதமர் மாளிகையில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். நாட்டின் வட பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பா-து-கலே பகுதிக்குத் தனது முதலாவது பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது. பின்னராக அவர் தனது புதிய அமைச்சரவையை இந்த வார இறுதியில் நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 16, 1989 இல் பிறந்த கப்ரியேல் அட்டால், பிரான்ஸில் 1956 இல் நிறுவப்பட்ட ஜந்தாவது குடியரசில் பதவிக்கு வந்துள்ள ஆகக் குறைந்த வயதுடைய பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
இதற்கு முன்னர், 1984 இல் சோசலிஸக் கட்சிப் பிரதமர் லோறன் ஃபபியுஸ் (Laurent Fabius) தனது 37 ஆவது வயதில் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேசமயம் வெளிப்படையாக ஒருபாலின உறவு முறையில் வாழ்ந்து வருகின்ற அட்டால்,நாட்டின் மிக உயர் அரசியல் பதவி ஒன்றில் அமர்கின்ற முதலாவது வெளிப்படையான ஓரினச் சேர்க்கையாளர் (openly gay) என்ற இடத்தையும் பெறுகிறார்.
பிரான்ஸின் முதலாவது இளவயது அதிபராகிய மக்ரோனின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக விளங்குகின்ற கப்ரியேல் அட்டால், சோஷலிசக் கட்சியின் இளைஞர் அணி ஊடாக 2006 இல் அரசியலுக்குள் பிரவேசித்தவர்.
2016 வரை அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளராக விளங்கிய அவர், 2016 இல் மக்ரோன் “En Marche!” என்ற தனது அரசியல் இயக்கத்தை நிறுவிய போது அவருக்குப் பின்னால் அணிதிரண்ட இளைஞர்களில் மிக முக்கியமானவராக மிளிர்ந்தார்.
அரச பேச்சாளர் உட்பட பல்வேறு அரசியல் பதவிகளை வகித்துவந்த அவர் பத்தாண்டுக்கும் குறைவான காலப்பகுதிக்குள் நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கிறார்.
பதவி விலகிச் செல்கின்ற பிரதமர் எலிசபெத் போர்னைக் கப்ரியேல் அட்டால் இன்று பகல் பிரதமர் மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். எலிசபெத் போர்னை விட 27 வயதுகள் குறைந்தவராகிய அட்டாலின் நியமனம் அரசியல் மட்டங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இளைய தலைமுறையினரிடையே அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதிபர் மக்ரோன் 2017 இல் பதவிக்கு வந்தது முதல் இதுவரை மூன்று தடவைகள் அமைச்சரவையை மாற்றியமைத்திருக்கிறார். இது நான்காவது மாற்றம் ஆகும். இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய ஆணையகத் தேர்தல்கள் மற்றும் உலக ஒலிம்பிக் விளையாட்டு விழா என்பவற்றை இலக்காகக் கொண்டே அவர் இந்தப் புதிய மாற்றங்களைச் செய்கிறார் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.