தற்கொலையை ஊக்குவித்து மத போதனை.
சொர்க்கம் செல்வதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சித்தாந்தத்தை பரப்பிய ருவான் பிரசன்ன குணரத்னவின் பிரச்சாரங்களில் கலந்துகொண்ட 30 பேர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையில் இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்தக் குழுவில் சில பிக்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் பௌத்த தத்துவத்தை முன்னிறுத்தி ருவன் பிரசன்ன பத்து வருடங்களாக பிரச்சாரங்கள் மற்றும் வழிபாடுகளை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட 30 பேரை இந்த தீவிர சிந்தனை கண்ணோட்டத்தில் இருந்து மீட்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதம் இறுதிப் பகுதியில் ருவான் பிரசன்ன குணரத்ன ஒருவகை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக ருவான் பிரசன்ன குணரத்னவின் பிரச்சாரங்களில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவரும் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் ஒருவர் விஷம் அருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ருவான் பிரசன்ன குணரத்ன உள்ளிட்ட ஏழு பேர் ஒரு வகையான விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.