பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்ததாகும்-பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்ததாகும். இந்தச் சட்டத்தால் மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கே உள்ளாக்கப்படுவார்கள். இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டு சிவஞானம் சிறீதரன்,
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட 44 ஆண்டுகள் நெருங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். ஜே.வி.பியின் 60ஆயிரம் வரையிலான போராளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வரலாறு ஒரு இரத்தம் படிந்த வரலாறு ஆகும். உலகத்துக்கும் இந்த செய்தியைதான் இதன் வரலாறுகள் கூறியுள்ளன. பலமுறை இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாக அரச தலைவர்கள் கூறினார்கள். ஆனால், இவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை.
தற்போதைய நீதி அமைச்சர் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்துள்ளார். ஆனால், இதில் தமிழ் மக்களுக்கு திருப்தி இல்லை. இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு இன்றுவரை என்ன நடந்ததென தமிழ் மக்கள் தெரியாதுள்ளனர். அவர்களது உறவுகள் இன்றும் நீதிக்காக போராடுகின்றனர்.
அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் பல போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர். இதனை கண்கண்ட சாட்சியங்களும் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகள் சரணடைந்தனர்.
இணைந்து இருந்த வடக்கு, கிழக்கை ஜே.வி.பி வழக்குத் தொடுத்து பிரித்தது. இதனால் கண்ட பயன் என்ன?. அதன்மூலம் இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட்டதா?. அல்லது நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டனவா?. இலங்கையின் சட்டங்கள் சிங்கள பௌத்தத்தையும் முன்நிறுத்தும் சட்டங்களாகவே உள்ளன.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் இன்னமும் ஆழமான விவாதங்கள் வேண்டும். இதன் உள் உடல்களை மாற்றுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகிடைக்காது. அதில் முழுமையான மாற்றங்கள் அவசியமாகும். சர்வதேச நாடுகளை ஏமாற்றவே இங்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்கின்றனர்.
நாட்டில் புரையோடியோயுள்ள தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க எந்தவொரு சிங்கள தலைவரும் தயாராக இல்லை. மற்றுமொரு இனத்தை அழிக்கும் வகையிலான சட்டங்களே கொண்டுவரப்படுகின்றன. மாறாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சட்டங்கள் அல்ல இவை.
மீண்டும் இளைஞர்களை கைதசெய்யவும் படுகொலைகள் செய்யவுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. என்றார்.