தமிழிசை நீக்கமா? புதுச்சேரிக்கு விரைவில் புதிய ஆளுநர்.
புதுவைக்கு துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசையை நீக்கி விட்டு விரைவில் புதிய ஆளுநர் நியமன அறிவிப்பு வெளியாகும்’ என பாஜ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுவையின் துணை நிலை ஆளுநராக கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கிரண்பேடி மாற்றத்துக்குபின் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியை அவர் ஏற்றுக் கொண்டார்.
சமீபகாலமாக அவர் அரசியல் கட்சிகளை, மக்கள் பிரதிநிதிகளை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாரா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு பெண்ணின் சபதம் எனும் வார்த்தையை பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் அரசியலில் குதிக்கப்போகிறீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து பாஜ மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘ஆளுநரின் பதவி காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது. அதனை தொடர்ந்து ஓய்வு பெறுவதை அவரது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் அரசியலில் ஈடுபட ஆர்வமாக உள்ளார். இதற்காக தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசினால் மீண்டும் அரசியலில் ஈடுபட பிரதமர் மோடி, அமித்ஷா உத்தரவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார். இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை விரைவில் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜ மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.
அதற்கான அறிவிப்பு 3 நாளுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி, வடசென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட பாஜ தலைமையிடம் தமிழிசை கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. யாரும் எதிர்பார்க்காத முடிவு தான் பாஜ தலைமை எடுக்கும். இதுபோன்று துணைநிலை ஆளுநர் மாற்றத்திற்குபின் தலைமை செயலர் ராஜீவ் வர்மாவையும் இடமாற்றம் செய்யும் உத்தரவும் ஒன்றிய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம். அவருக்கு பதிலாக வடமாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான குப்தா அல்லது சஞ்சீவ் குமார் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது,’ என்றனர்.
இந்நிலையில், தமிழிசை ராஜினாமா செய்ய உள்ளாரா? அல்லது நீக்கப்பட உள்ளாரா? என்ற பரபரப்பு எழுந்து உள்ளது.