கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை- பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர்”
“ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்”
“30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
“கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே வழங்க வேண்டும்” என்று அந்த இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.