பாரிஸ் புறநகர வீட்டில் தாய், 4பிள்ளைகளது உடல்கள் மீட்பு!
மனநலம் பாதித்த தந்தை புரிந்த கோரக்கொலைகள்?
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் நகருக்கு அருகே மோ(Meaux – Seine-et-Marne) என்ற பகுதியில் மாடிக் குடியிருப்பு வீடொன்றில் இருந்து ஐந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீட்டின் உள்ளே உடல்கள் கிடப்பது நத்தார் தினமான நேற்றுத் திங்கட்கிழமை தெரியவந்ததை அடுத்துப் பொலீஸார் மற்றும் விசாரணையாளர்கள் உடல்களை மீட்டிருக்கின்றனர். பெண் ஒருவர் மற்றும் 7,4,2 வயதுகளையுடைய பிள்ளைகள் எட்டு மாதங்களேயான பச்சிளங்குழந்தை ஆகியோரது உடல்களே அவை என்று முற்கொண்டு வெளியான தகவல்கள் தெரிவித்தன.
வீட்டில் வசித்துவந்த-பெண்ணின் துணைவர் என நம்பப்படும் – ஆண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்துத் தலைமறைவாகியிருந்த அவரைப் பாரிஸ் புறநகரான செவ்ரனில் (Sevran) வைத்துப் பொலீஸார் கைதுசெய்துள்ளனர்.
இரண்டு தினங்களாக வீடு மூடிக் கிடந்துள்ளது. அதனை அவதானித்த அயல் குடியிருப்பாளரது மகன் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி விசாரித்துள்ளார். வீட்டில் இருந்த ஆண்”எல்லோரும் உறக்கத்தில் இருக்கிறார்கள்” என்று அவரிடம் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த அயலவர் நேற்று மீண்டும் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். அச்சமயம் வாயிலில் இரத்தக் கறைகளைக் கண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் வழங்கிய தகவலை அடுத்தே பொலீஸார் வீட்டுக்கு வந்து கதவை உடைத்துச் சோதனையிட்டு உடல்களைக் கண்டுபிடித்தனர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் துணைவர் என நம்பப்படுகின்ற 33 வயதான ஆண் ஒருவரே இக்கொலைகளைப் புரிந்துள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காணப்படும் அவர் அப் பெண்ணை அடிக்கடித் தாக்கி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்தப் படுகொலைகள் தொடர்பான மேலதிக தகவல்களை மோ(Meaux) பிரதேச அரச சட்டவாளர் இன்று செவ்வாய்க்கிழமை பின்னராக செய்தியாளர்களுக்கு வெளியிடவுள்ளார்.
பாரிஸ் பிராந்தியத்தில் குடும்ப வன்முறைகளில் குழந்தைகள் கொல்லப்படுகின்ற இது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.