“பெண்கள் பல்வகைமை உள்ளோராய் இருக்க முடியும் என்பதைக் காட்டுங்கள்..”!
Kumarathasan Karthigesu-பாரிஸ்
“…. நீங்கள் யார் என்பதை எவரும் தீர்மானிக்க முடியாது..” குட்டைத் தலைமயிரோடு கிரீடம் வென்ற அழகி செவ்வி
“வலிமையான பெண்களின் மதிப்புகளைப் பாதுகாப்பேன்”-என்று உறுதியளித்திருக்கிறார் பிரான்ஸின் 2024 ஆம் ஆண்டுக்கான இளம் அழகியாக வென்றிருக்கின்ற எவ் ஜீல் (Eve Gilles). ” பெண்கள் பல்வகைமை உடையவர்களாய் இருக்க முடியும் என்பதைக் காட்டுங்கள். நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை அடுத்தவர் தீர்மானிக்க முடியாது” – என்றும் அவர் தனது வெற்றிக்குப் பின்னர் நாட்டின் யுவதிகளைப் பார்த்து உற்சாகத்துடன் கூறியிருக்கிறார்.
ஆண்டுக்கு ஒருமுறை நாட்டின் இளம் அழகியைத் தெரிவுசெய்வதற்காக நடத்தப்படுகின்ற போட்டி (Miss France) பெரும் கண்கவர் விழாவாக நேற்றிரவு இடம்பெற்றது. பிரான்ஸின் Bourgogne பிராந்தியத்தின் தலைநகராகிய Dijon இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாட்டின் வடக்கு எல்லைப் பிராந்தியமாகிய நோ- பா-து-கலேயைப் (Nord-Pas-de-Calais) பிரதிநிதித்துவம் செய்த இருபது வயதான யுவதி எவ் ஜீல் (Eve Gilles) அழகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அவருக்கான வெற்றிக் கிரீடத்தை இந்த ஆண்டுக்கான (2023) அழகி இந்திரா அம்பியோ (Indira Ampio) சூட்டினார்.
எவ் ஜீல் இறுதிப் போட்டியில் தோன்றிய சக அழகிகள் அத்தனை பேரில் இருந்தும் வித்தியாசமாகத் தனது தலைமயிரைக் மிகக் குட்டையாக வெட்டி வடிவமைத்திருந்தார். அது தன்னுடைய தெரிவு என்று அவர் பெருமையாகக் கூறிக்கொண்டார்.
அழகிப் போட்டிகளது வரிசையில் இவ்வாறு தலை மயிரை ஆண்களைப் போன்று குட்டையாக வெட்டிய பெண் ஒருவர் கிரீடம் வென்றிருப்பது இதுவே முதல் தடவை ஆகும் என்று கூறப்படுகிறது.
அழகி எவ் ஜீல் 09,ஜூலை 2003 இல் டன்கீர்க்கில் (Dunkirk) பிறந்தவர். அவரது பெற்றோர்கள் பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியமாகிய ரியூனியன் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அழகிப் போட்டித் தயார்ப்படுத்தல்களில் படு பிஸியாக ஈடுபட்டு வந்த போதிலும் கல்வியில் அவர் ஒரு புள்ளிவிவரவியல் நிபுணராக வரவேண்டும் என்ற இலக்கில் MIASHS பட்டப்படிப்பை (Mathematics and Computer Science Applied to the Human and Social Sciences) மேற்கொண்டு வருகிறார்.
அழகித் தெரிவுப் போட்டி வரிசையில் நேற்று நடைபெற்றிருப்பது 77 ஆவது போட்டி ஆகும். முப்பது இளம் அழகிகளில் இருந்து ஒருவரை ஏழு பேர் கொண்ட நடுவர் சபையும், பார்வையாளர்களான பொதுமக்களும் தெரிவு செய்கின்றனர்.
பிரான்ஸின் அழகியாகத் தெரிவு செய்யப்படுவர் அடுத்த ஓராண்டு காலத்தில் “மிஸ் பிரான்ஸ்” நிறுவனத்தில் உயர் மட்டப் பதவி ஒன்றுக்கும் சுமார் மூவாயிரம் ஈரோக்கள் வரையான ஊதியத்தொகைக்கும் உரித்துடையவர்களாவர். அவர் வசிப்பதற்காகப் பாரிஸ் 17 ஆவது நிர்வாகப் பிரிவில் (le XVIIe arrondissement) “வெற்றி வளைவு” நினைவிடம் (l’Arc de Triomphe) அமைந்துள்ள இடத்துக்கு அருகே ஒரு மாடிக் குடியிருப்பும் வழங்கப்படும்.
அழகிப் போட்டிக்கு அனுசரணை வழங்கிய பெரும் நிறுவனங்கள் அன்பளிப்புச் செய்கின்ற சொகுசுக் கார் மற்றும் ஆபரணங்கள் போன்றவையும் வெற்றியாளருக்குக் கிடைக்கும்.