கீரிமலையில் சைவ சமய அடையாளங்கள் விடுவிக்கப்படாமல் தனியார் பல்கலைக்கழகம்: செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கண்டனம்.
யாழ்ப்பாணம் கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள சைவ சமய அடையாளங்கள் விடுவிக்கப்படாமல் தனியார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் வழங்க முற்பட்டால் அதனைப் பெற்று சைவ சமயத்தின் சாபத்துக்கு ஆளாக எவரும் விரும்பக்கூடாது என்று தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் நகுலேஸ்வரம், காங்கேசன்துறை கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மஹிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை தமிழ் மக்களின் எதிர்ப்பால் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர்.இருப்பினும் அதனை அண்டிய பகுதிகளைத் தொடர்ந்தும் ஆட்சி செய்யவும், தமக்கான நிதியீட்டலைத் தேடவும், தமிழர்களின் குறிப்பாக சைவ சமயத்தவர்களின் எதிர்ப்பைத் திசை திருப்பும் வகையிலும் அப்பகுதியை ஒரு தமிழரிடம் அதுவும் ஒருசைவப் பெருமகனாரிடம் முதலீடு என்னும் பெயரில் வழங்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே, இப்பகுதியில் உள்ள 7 சைவ சின்னங்களும் விடுவிக்க நாம் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை நிறைவேறாத நிலையில் அப்பகுதிகளைப் பெற்று தொழில் புரிய எவர் முனைந்தாலோ அல்லது உறுதுணை புரிந்தாலோ அது சைவ சமயத்துக்குச் செய்யும் பெரும் துரோகமாகவே நாம் பார்க்கின்றோம் எனப் பகிரங்க வெளியில் கூறி வைக்க விரும்புகின்றோம்’ என்றார்.