தபால் ஊழியர்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு.

செ.திவாகரன்

நுவரெலியாவில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களும் , சுற்றுலா பயணிகளும். தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நுவரெலியா தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்களும் , சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (12) செவ்வாய்க்கிழமையும் தொடர்கின்றது.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா தபால் அலுவலகங்கள் முற்றிலும் செயலிழந்து காணப்படுகின்றன.

எனினும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.