பிரெஞ்சுக் கப்பல் மீது செங்கடலில் ட்ரோன் தாக்குதல் முயற்சி!
ஹூதிக்கள் கைவரிசை முக்கிய கடற் பாதையில் அதிகரிக்கின்ற பதற்றம்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
செங்கடலில் பல நோக்குப் பாதுகாப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற பிரான்ஸின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலான ‘லோங்குடொக்’ (frigate Languedoc) மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
ஜூதி (Houthi) இனத் தீவிரவாதிகளது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு யேமன் (Yemen) பகுதியில் உள்ள துறைமுகத்தில் இருந்து கப்பலை நோக்கி நேர்முகமாக வந்த இரண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகப் பிரெஞ்சுப் பாதுகாப்புப் படைகளின் பிரதம தளபதி
ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அவற்றின் இலக்கு போர்க்கப்பல்தானா என்பது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
காஸாவின் தென்பகுதியில் இஸ்ரேல் அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற சமயத்தில் சனி-ஞாயிறு இரவு வேளை இந்த ட்ரோன் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
காஸாவில் மாதக் கணக்காக சிக்குண்டுள்ள மக்களுக்கு உணவு மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்கள் தடுக்கப்பட்டிருப்பதால் தாங்கள் சியோனிஸ இஸ்ரேல் அதிகாரத்துக்கு உதவும் கப்பல்களைத் தடுக்கப் போவதாக ஹூதி இயக்கம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்கின்ற அனைத்து நாட்டுக் கப்பல்களும் தாக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வெடித்துள்ள போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக யேமன் நாட்டின் ஹூதி தீவிரவாதிகளும் (Houthi) ஓர் முனையில் இணைந்துகொண்டதை
அடுத்துச் செங்கடல் பகுதியில் பதற்ற நிலை தோன்றி உள்ளது. அமெரிக்கா அதன் கடற்படைக் கப்பல்களை அதி உஷார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறது.
செங்கடலைக் கடக்கின்ற சர்வதேசக் கப்பல்கள் மிகுந்த அவதானத்துடனேயே பயணித்து வருகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
யேமனிய நாட்டின் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற ஈரானிய ஆதரவு பெற்ற – ஹூதிக்கள் இஸ்ரேலிய நாட்டின் வர்த்தகக் கப்பல்கள் இரண்டின் மீது கடந்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தியிருந்தனர். அதேசமயம் – செங்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையின் யுஎஸ்எஸ் கார்னி(USS Carney) கப்பலை நோக்கி ஹூதிக்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர் என்று பென்ரகன் தெரிவித்திருந்தது.
மத்திய கிழக்கில் செங்கடலையும்(Red Sea) ஏடன் வளைகுடாவையும்(Gulf of Aden) பிரிக்கின்ற – சிறிய – ஒடுங்கிய – கடற்பகுதி சர்வதேச கப்பற் போக்குவரத்துப் பாதையில் மிகுந்த கேந்திரமுக்கியத்துவம் மிக்க நீர்ப் பகுதி ஆகும். இந்தப் பகுதி யேமனிய ஹூதி இனத் தீவிரவாதிகளினதும் சோமாலியக் கடற்கொள்ளையர்களினதும் ஆதிக்கம் நிறைந்த கடற்பிரதேசமாக விளங்குகிறது.