ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வரும் தமிழ் மொழி அமுலாக்கம்.
‘ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இன்மையே இதற்கு காரணமாகும்’ என்று, என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மலையகத்தில் சிலபாடசாலைகளுக்கு இலவசக் கல்வியைப் பெற்றுக்கொள்வது தடையாக இருந்து வருகின்றது. பதுளை மாவட்டத்தில் ராபெரி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதி இல்லை. அவர்கள் அதிகாலை 4 மணிக்குப் பந்தங்களை ஏந்திக்கொண்டு 15 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மடுல்சீமை பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய துர்ப்பாகியநிலை இருந்து வருகின்றது.
எனினும், மாணவர்களின் ஜி.சீஈ. உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பெறுபெறுகள் சிறப்பாக உள்ளன.
மலையகத்தில் பாடசாலைகளில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும் அந்தப் பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.பதுளை மாவட்டத்தில் பசறை தொகுதியில் தமிழ் மொழி மூல மூன்று தேசிய பாடசாலைகளே இருக்கின்றன. இவைகளில் வளங்கள் இருந்தாலும் போதிய ஆசியர்கள் இல்லை. குறிப்பாக உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பாடங்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.அதனால் மலையகப் பாடசாலைகளுக்கும் ஜி.சீஈ. உயர்தர மற்றும் சாதாரண தரப் பாடங்களுக்குத் தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் ஏற்கனவே இருந்து வந்தது. ஆனால் மாறி மாறி வந்த ஆளுநர்கள், மலையகத்தின் கல்வி. சுகாதாரம் என அனைத்தையும் மட்டம் தட்டி இருக்கிறார்கள். நியமிக்கப்படும் ஆளுநர்கள் வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு மலையகம் தொடர்பாக போதுமான அறிவு இல்லை. ஊவா மாகாணத்தில் 202 தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன. இந்தப் பாடசாலைகளில் தமிழ் மொழி அமுலாக்கம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைஎடுக்க வேண்டும்’ என்றார்.