போதைப்பொருள் பாவனை மூலம் இளைஞர்கள் அழிவதற்கு வடக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது: வினோ நோகராதலிங்கம் தெரிவிப்பு.
யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று இன்று போதைப்பொருள் ஊடாக தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அண்மையில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலத்திரு நாயகி என்ற வீராங்கனை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். வன்னியில் 72 வயதிலும் சாதிக்கக்கூடிய வீர, வீராங்கனைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இளைஞர், யுவதிகளுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பார்கள். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுங்கள்.வடக்கு மாகாணத்தில் இன்று இளைஞர் மற்றும் யுவதிகள் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இன்று அவர்கள் வேறு திசைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
இந்த நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளனர். இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள், வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது. யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு வடக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.