பாரிஸ் புறநகரில் குடியிருப்புக்குள் தரையிறங்கிய சிறிய விமானத்தால் பதற்றம்! மூவர் காயம்!!
இன்று மாலை பரபரப்பு
Kumarathasan Karthigesu-பாரிஸ்
சிறிய இரட்டை இயந்திர விமானம் ஒன்று திடீரெனக் குடியிருப்புக்கு நடுவே அவசரமாகத் தரையிறங்கி – மோதி – இரண்டாகப் பிளந்து சிதறுண்டது.
பாரிஸ் அருகே வல்-து-மான் (Val-de-Marne) மாவட்டத்தில் உள்ள வீல்யூய்ப் (Villejuif) நகரில் இன்று மாலை ஐந்து மணியளவில் பரபரப்பான இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
அங்குள்ள l’avenue Maxime Gorki பகுதியில் குடியிருப்புகள் இடையே விமானம் வீழ்ந்த இடத்துக்கு அம்பலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்ததால் இன்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்புக் காணப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த மூவரும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விமானத்தைச் செலுத்தி வந்த 80 வயதுடைய விமானி ஆபத்தான நிலையில் உள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. விமானம் மோதிச் சிதறிய பகுதியில் தரையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அந்த உல்லாச விமானம் நாட்டின் வடக்கே நோர்மண்டிப் பிராந்தியத்தின் தலைநகராகிய Rouen இல் இருந்து புறப்பட்டுள்ளது.
தீடீரென விமானம் ஒன்று தாழப் பறந்துவருவதை மாடிவீடுகளில் இருந்தவாறு அவதானித்த பலரும் பதற்றம் அடைந்தனர். சிலர் அது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா என்றவாறு எண்ணியும் அச்சமடைந்தனர்.
விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது எதற்காக என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கான விசாரணை மற்றும் பகுப்பாய்வு அலுவலகம் (Office of Investigation and Analysis for Civil Aviation Safety) இந்தச் சம்பவத்தை விசாரித்து வருகிறது.