நம்பிக்கையின் உறுதியான அடையாளமான COP 28-திருத்தந்தை பிரான்சிஸ்.
COP 28 கூட்டமானது நம்பிக்கையின் உறுதியான அடையாளத்தை, தெளிவான மற்றும் உறுதியான அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், நேரம் குறைவாக உள்ளது, நிகழ்காலத்தில் நாம் தேர்ந்தெடுப்பதைப் பொருத்தே நம் அனைவரின் எதிர்காலம் இருக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 2 சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் இடம்பெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP28 கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பதிலாகப் பங்கேற்று திருத்தந்தையின் கருத்துக்களை வாசித்தளித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.
காலநிலை மாற்றம் என்பது “மனித வாழ்வின் மாண்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட உலகளாவிய சமூகப் பிரச்சனை” என்றும், நாம் வாழ்க்கைக் கலாச்சாரத்தையா அல்லது இறப்பு கலாச்சாரத்தை நோக்கிச் செயல்படுகிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பூமி மற்றும் ஏழைகளின் அழுகைக்கு செவிசாய்ப்போம், இளைஞர்களின் நம்பிக்கை மற்றும் சிறாரின் கனவுகளுக்கும் செவிசாய்ப்போம் என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இத்தகையோரின் எதிர்காலம் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றங்கள்
தற்போதைய காலநிலை மாற்றங்கள், புவி வெப்பமடைதல், வளிமண்டலத்தில் பச்சை இல்ல வாயுக்களின் அதிகரிப்பு ஆகியவை மனித செயல்பாடுகளால் ஏற்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சனையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மனத்தாழ்மை மற்றும் துணிவுடன் நமது வரம்புகளை உணர்ந்து முழுமையாக வாழ்வதற்கான ஒரே வழிக்குத் திரும்ப நாம் எச்சரிக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார்.
பழங்குடியின மக்கள், காடழிப்பு, பசி, நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை, புலம்பெயர்ந்தோர் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை அவர்கள், பிறப்பு என்பது ஒரு பிரச்சனையோ, வாழ்க்கைக்கு எதிரானவையோ அல்ல மாறாக அவை வாழ்க்கைக்கான ஓர் ஆதாரம் என்றும், குடும்பங்கள் மற்றும் மக்கள் மீது திணிக்கப்படும் சில கருத்தியல் மற்றும் பயனுள்ள மாதிரிகள் உண்மையான காலனித்துவங்களைக் குறிக்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
பல்வேறு மக்கள் மீது சுமத்தப்படும் நிதிக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான பொருத்தமான வழிகளை அடையாளம் காண்பது சரியானது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், படைப்பின் மீதான கவனிப்பு, அமைதி ஆகிய இரண்டும் மிகவும் அவசரமான பிரச்சினைகள், அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம், உக்ரைன் மற்றும் உலகின் பல பகுதிகளில் நடக்கும் பல போர்களில் மனிதகுலம் தனது ஆற்றலை வீணடிக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், போர் மற்றும் மோதல்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது மாறாக அவற்றை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
பொதுவான இல்லத்தைப் பாதுகாத்தல்
மனித உயிர்கள் மற்றும் நாம் வாழும் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் போர் மற்றும் மோதல்கள் பாதிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் பணத்தைக் கொண்டு, உலக மக்களின் பசியை நீக்குவதற்கான உலகளாவிய நிதியை உருவாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு புதிய பன்முகத்தன்மைக்கு அடித்தளமிடுவதற்கு மக்கள், இளைஞர்கள் மற்றும் சிறாரின் குரலுக்கு செவிகொடுப்பது இன்றைய தலைமுறையின் பணி என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், காலநிலை மாற்றம், அரசியல் மாற்றத்தின் அவசியத்தை உணர்த்துகிறது என்றும், கடந்த கால வடிவங்களான தனித்துவம் மற்றும் தேசியவாதத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேறி, சூழலியல் மாற்றத்தை அனுமதிக்கும் பொதுவான பார்வையை ஏற்றுக்கொள்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலாச்சார மாற்றங்கள் இல்லாமல் நிலையான மாற்றங்கள் எதுவும் இல்லை என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கத்தோலிக்க திருஅவையின் அர்ப்பணிப்புள்ள பணி மற்றும் ஆதரவை சுற்றுச்சூழலுக்கு உறுதியளிப்பதாகக்கூறி, கல்வியில் பொதுவான பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாழ்க்கை முறைகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் பொறுப்புடன் இருப்பது அனைவருக்கும் சொந்தமானது மற்றும் ஒவ்வொருவரின் அடிப்படைக்கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு தீர்வுகாண எடுக்கப்படும் முயற்சிகள் திறமை, பிணைப்பு, எளிமையாகக் கண்காணிக்கப்படுதல் போன்றவற்றின் வழியாக நம்மை உந்தித்தள்ளுகின்றது, ஆற்றல் திறன், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், புதைபடிவ எரிபொருட்களை நீக்குதல், பின்தங்கியவர்களின் வாழ்க்கை முறைக் கல்வி போன்றவற்றில் தன்னை உணர்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், தயவுசெய்து பின்னோக்கிச் செல்லாமல், முன்னோக்கிச் செல்வோம் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.
அமைதியின் தூதர் புனித பிரான்சிஸ் அசிசியார்
அமைதிக்காக பாடுபட்ட புனித பிரான்சிஸ் அசிசியாரின் பெயரைக் கொண்ட நானும் இதயப்பூர்வமாக உங்களிடம் இந்த செபத்தைக் கூறுகின்றேன் என்று கூறி, பிளவுகளை நம் முதுகுக்குப் பின் விட்டுவிட்டு ஆற்றலுடன் ஒன்றிணைவோம். கடவுளின் உதவியுடன், பொதுவான எதிர்காலத்தை ஒளியின் விடியலாக மாற்ற போர்கள் சுற்றுச்சூழல் பேரழிவுகள் என்னும் இரவிலிருந்து வெளிவருவோம் என்று தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.