ஜேர்மனி மியூனிச்சில் பனிப் பொழிவால் விமானசேவைகள் இடைநிறுத்தம்.

தெற்குப் பகுதி ஸ்தம்பிதம்.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றைக் கடும் குளிரும் பனிப் பொழிவும் கடுமையாகப் பாதித்துள்ளன. மியூனிச் விமான நிலையத்தில் பனியில் புதைந்து கிடக்கின்ற ஜெட் விமானம் ஒன்றையே படத்தில் காண்கிறீர்கள்.

கடும் பனிப் பொழிவால் ஜேர்மனியின் தெற்குப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பவாறியா (Bavaria) மாநிலத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. அங்கு 40 சென்ரிமீற்றர் பனிப் பொழிவு பதிவாகி இருக்கிறது.

மியூனிச் விமான நிலையத்தில் (Munich Airport) விமானங்கள் இறங்குவதும் கிளம்புவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் முடங்கிக் கிடக்கின்றனர். ஞாயிறு காலை வரை இந்த நிலைமை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. மியூனிச் பெரும் பாகத்தில் நீண்ட தூர ரயில் போக்குவரத்துகளும் சனிக்கிழமை காலை முதல் தடைப்பட்டுள்ளன. வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

படம் :Allianz Arena உதைபந்தாட்ட அரங்கை பனி மூடிப் பரந்துள்ள காட்சி.

பவாறியாவில் கிறிஸ்மஸ் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. பனிப் பொழிவு அதிகரிப்பதன் காரணமாக பவாறியா அல்ப்ஸ்(Bavarian Alps) பிராந்தியத்தில் பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

பயேர்ன் மியூனிச்(Bayern Munich) மற்றும் யூனியன் பேர்ளின்(Union Berlin) அணிகளுக்கு இடையே இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த உதைபந்தாட்டம் மைதானத்தைப் பனி மூடியதன் காரணமாக ரத்துச் செய்யப்பட்டது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">