குடும்ப வன்முறை: பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு விசேட உதவிக் கொடுப்பனவு
நிலைவரத்தை பொறுத்து 250-1000 ஈரோ கிடைக்கும்.
பிரான்ஸில் டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகின்ற திட்டங்களில் துணைவர்களால் துன்புறுத்தப்பட்டு ஒதுங்கி வாழ நேரும் பெண்களுக்கான விசேட நிதி உதவித் திட்டமும் ஒன்றாகும்.
நாடெங்கும் குடும்ப வன்முறைகள் தலைவிரித்தாடுவதால் அதிக எண்ணிக்கையான குடும்பப் பெண்கள் கடும் துன்பங்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். அத்தகையோர் துணைவருக்கு அஞ்சி வேறு இடங்களில் தஞ்சம் புக நேரிட்டால் அல்லது பிரிந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்ற சூழ்நிலையில் அவசர தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. தேவைகளைப் பொறுத்து 250 முதல் ஆயிரம் ஈரோக்கள் வரை உதவி கிடைக்கும்.
அதேசமயம் மாவட்டங்கள் தோறும் கணவரிடம் இருந்து பிரிந்துவாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ள பெண்களை அடையாளம் காண்கின்ற பணிகளைக் குடும்ப நிதி உதவி நிறுவனம் (CAF) உள்ளூர் சங்கங்களுடன் இணைந்து முன்னெடுக்கும் என்று ஆண்-பெண் சமத்துவத்துக்கான அமைச்சுப் பிரதிநிதி தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸில் இந்த ஆண்டு மட்டும் 2லட்சத்து 44 ஆயிரம் குடும்ப வன்முறைகள் பொலீஸ் மற்றும் பாதுகாப்புப பிரிவினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 118 பெண்கள் தங்கள் துணைவர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.