மூன்று பெண் குழந்தைகளைக் கொன்ற தந்தை பொலீஸில் சரண்!
பாரிஸ் புறநகரில் அதிர்ச்சி சம்பவம்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸின் புறநகரப் பிராந்தியமாகிய வல்-து-மானில் (Val-de-Marne) உள்ள அல்போவீல் (Alfortville) பகுதியில் வீடொன்றில் போர்வைக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மூன்று சிறு பெண் குழந்தைகளின் உடல்களைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.
குழந்தைகள் மூவரையும் தானே கொன்றதாகக் கூறிக்கொண்ட 41 வயதான நபர் ஒருவர் நாட்டின் வடக்கே நோர்மன்டியில் உள்ள பொலீஸ் நிலையம் ஒன்றுக்குச் சென்று சரணடைந்ததை அடுத்தே குழந்தைகள் மூவரது உடல்களும் அல்போவீல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 4,10,11 வயதுகளுடைய அவர்கள் மூவரும் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலீஸில் சரணடைந்தவர் குழந்தைகளது தந்தை என்று கூறப்படுகிறது. மொரோக்கோ நாட்டில் பிறந்த அந்த நபர் குடும்ப வன்முறைக் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்று விடுதலையானவர் எனத் தெரிய வருகின்றது. குழந்தைகளது தாயார் எங்கே என்ற தகவல் உடனடியாகத் தெரியவரவில்லை. அவரது கதி தொடர்பில் அச்சம் நிலவுகிறது.
குழந்தைகளது உடல்கள் மீட்கப்பட்ட பகுதியில் குடியிருப்பு வாசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கு அயலவர்களை ஆற்றுப்படுத்துகின்ற உளவள சேவைகளை உள்ளூர் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
பிரான்ஸில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கும் விதமாக அதிகரித்து வருகின்றன. குடும்பப் பெண்கள், குழந்தைகள் மீதான சித்திரவதைகள் மற்றும் கொலைக் குற்றங்கள் பெருகிவருவதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் நேற்று பாரிஸில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.