அதிகரிக்கும் சுவாசத் தொற்று: சீனா தகவல் தர வேண்டும்.
சிறுவருக்கு நிமோனியா உலக சுகாதார அமைப்பு.
சீனாவில் சுவாசத் தொற்று நோய்கள் அதிகரித்துவருவது குறித்துக் கவலை வெளியிட்டிருக்கின்ற உலக சுகாதார நிறுவனம் அது தொடர்பான முழுமையான விவரங்களை வழங்குமாறு பெய்ஜிங்கிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சுவாசத் தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சீன மக்களுக்கு சுகாதார நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சுகாதார நிறுவனத்தின் X (Twitter) சமூகவலைத் தளத்தில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுவாச நோய்கள் குறிப்பாக சிறுவர்களிடையே அதிகரித்துவருகின்ற சளிச் சுரம் (pneumonia) தொடர்பான முழுமையான விவரங்களைத் தருமாறு சீனாவிடம் பூர்வாங்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சீனாவின் வடக்குப் பகுதியில் சிறுவர்களிடையே நிமோனியா சளிச் சுரம் உட்பட பரிசோதித்து அறியாத சுவாச நோய்கள் பரவி வருவது பற்றிய தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஊடகங்களிலும் அவை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்தே
இன்புளுவன்சா(influenza,) கோவிட் (SARS-CoV-2) ஆர்எஸ்வி (RSV) எனப்படும் சிறுவர்களைத் தாக்கும் மைக்கோப்ளாஸ்மா நிமோனியா (Mycoplasma pneumonia) போன்ற அறியப்பட்ட சுவாச நோய்ப்பரவல்கள் தொடர்பான சமீபத்திய மருத்துவ மற்றும் அறிவியல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை சுகாதார நிறுவனம் கேட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் பரிசோதிக்கப்படாத – அறியப்படாத – தொற்று நோய்கள்(undiagnosed or unknown diseases) தொடர்பான தகவல்களை நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் அதற்காக இது போன்று அறிக்கை வெளியிட்டுத் தகவல் கோருவது வழமைக்கு மாறானது ஆகும்.
இதேவேளை, குளிர் பருவநிலை தோன்றியுள்ளதை அடுத்துக் கோவிட் வைரஸ் திரிபுகளது தொற்றுக்களில் அதிகரிப்புக் காணப்படுவதாக பிரான்ஸின் பொதுச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கழிவு நீரில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் இது தெரியவந்துள்ளது. அத்துடன் 15 வயதுக்குட்பட்டோர் மத்தியில் பக்ரீரியாவால் பரவுகின்ற மைக்ரோப்ளாஸ்மா நிமோனியா (Mycoplasma pneumonia) காய்ச்சல் அதிகரித்துவருகின்றது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.