நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு நாம் காரணமல்ல : மஹிந்த ராஜபக்ஷ.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் காரசாரமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, ஜனாதிபதியாக பதவி வகித்த ஒன்பது வருட காலப்பகுதியில் 2006 முதல் 2009 வரையிலான நான்கு வருட யுத்தத்தின் போது இலங்கையின் சராசரி வருடாந்த பொருளாதார வளர்ச்சி 6 வீதமாக இருந்தது.2010 முதல் 2014 வரையிலான போருக்குப் பிந்தைய ஐந்து ஆண்டுகளில், இது 6.8மூ ஆக அதிகரித்துள்ளது. 1948 முதல் 2005 வரை இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களின் பங்களிப்பையும் விட இந்த நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு வருமானத்தை அதிகரித்தில் எனது அரசாங்கத்தின் பங்களிப்பு இரண்டு மடங்கு அதிகம்.
புலிகளுடனான போர், 2007 இல் உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் 2008-2009 உலக நிதி நெருக்கடி ஆகியவற்றின் மத்தியிலேயே பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 2015 மற்றும் 2019 க்கு இடையில், சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மூலம் தாங்க முடியாத அளவு வெளிநாட்டு வர்த்தகக் கடன் திரட்டப்பட்டமை, அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பாகும் என்றார்.