நீர்கொழும்பு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த கணவர்- மனைவி சந்தேகம்
இராகலை நகரில் வைத்து நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட ஹாட்வெயார் ஒன்றின் உரிமையாளர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராாலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் உடல் நீர் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அவரது மனைவி வடிவேல் விஜயகௌரி, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக வைத்தியசாலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவித்துள்ளார். .
இராகலை தோட்டம் மத்தி பிரிவை சேர்ந்தவர் கோவிந்தசாமி கிருஷ்ணகுமார். இராகலை நகரில் சுமார் எட்டு வருடங்களாக ஹாட்வெயார் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர், நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் தனது கடைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கடனாக கொள்வனவு செய்துள்ளார்.
இவர் பெற்ற கடனை செலுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு, வர்த்தகருக்கு வழங்கப்பட வேண்டிய கடன் பணத்தை தவணை முறையில் செலுத்தியுள்ளார்.
இருப்பினும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதியான கோ.கிருஸ்ணகுமார் இரண்டுமுறை ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் கடந்த (23.11.2023) அன்று இராகலை நகருக்கு கார் ஒன்றில் வருகை தந்து, ஹாட்வெயார் வர்த்தரான கிருஸ்ணகுமாரை கைது செய்து அவரை இராகலை பொலிஸ் நிலையத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
இராகலை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கிருஸ்ணகுமாரை வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவரை (29.11.2023) வரை விளக்க மறியலில் வைக்க நீதனான் உந்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் பதுளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்த நிலையில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பதுளை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட குடும்பத்தார் கிருஸ்ணகுமாருக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் தன்னை நீர்கொழும்பு நீதிமன்றில் புதன்கிழமை ஆஜர்படுத்துவதற்காக அங்கு எனக்கு பிணை எடுக்க நடவடிக்கை எடுங்கள் என கிருஸ்ணகுமார் தெரிவித்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் (26.11.2023) இரவு இராகலை பொலிஸார் இருவர், கிருஸ்ணகுமாரின் வீட்டுக்கு வருகைதந்து கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கிருஸ்ணகுமாரின் மனைவி விஜயகௌரி,மற்றும் கிருஸ்ணகுமாரின் சகோதரர்கள் இருவர் (27.11.2023) அதிகாலை நீர்கொழும்புக்கு சென்று வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைககாக வைக்கப்பட்டிருந்த கிருஸ்ணகுமாரின் உடலை பார்வையிட்டு அங்கு சம்பவம் தொடர்பாக மரண விசாரணைக்காக வருகை தந்திருந்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் முன் அடையாளம் காண்பித்துள்ளார்.
இதன்போது தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக கிருஸ்ணகுமாரின் மனைவி நீதவானிடம் தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு பொலிஸார் விரைவாக அறிக்கை சமர்பிக்குமாறும் சடலத்தை பிரேத பரிசோதணையின் பின் உறவினர்களிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.