உடனடி தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஐநா அழைப்பு.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, உடனடி தற்காலிக போர் நிறுத்தத்துக்கும் காஸாவின் மக்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகள் தடையின்றி கிடைக்கவும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாகவும் நிபந்தனையின்றியும் ஹமாஸ் பிடியில் வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமெனவும் குறுித்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக குழந்தைகள் விடுவிக்கப்படுவதும் உடனடி வாழ்வாதார உதவிகள் காஸாவுக்கு கிடைக்க செய்யவும் சபை வலியுறுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம் 12 நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்துள்ளன.
தீர்மான வரைவில், ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதால் புறக்கணித்ததாக அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளின் தூதுவர் லிண்டா தாமஸ் கிரீன்பிஃல்ட் தெரிவித்துள்ளார். நான்கு முறைக்குமேல் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து இந்த முறை தான் நாடுகளின் பெரும்பான்மை ஒப்புதலின் பேரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்கா முன்மொழிந்த, உறுப்பினராகவுள்ள நாடுகள் பயங்கரவாதத்தில் இருந்து அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்பொருட்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும் என்கிற தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யாவால் மறுக்கப்பட்டது.