அரசியல் தலையீடு இல்லையென நிரூபித்தால், இலங்கை மீண்டும் ஐ.சி.சிக்குள்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதனை இலங்கை கிரிக்கெட் சபை நிரூபிக்கும் வேண்டும் என சர்வதேசக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளது எனத் தெரிவித்துள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையிலிருந்து நேற்றைய தினம் இடைநிறுத்தியது.
இலங்கைக் கிரிக்கெட் சபை சில வருடங்களாக பெரும் அரசியல் தலையீடுகளுக்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றது என பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதனால்தான் இலங்கைக் கிரிக்கெட் அணி படு பாதாளத்துள் விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் தலையீடுகள் உள்ளன என்பதை, முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரும் தாம் விளையாடிய காலப்பகுதியில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படு தோல்விகளையே சந்தித்தது.
இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளது என்பதை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் தெரிவித்து வந்த நிலையில், இலங்கைக் கிரிக்கெட் விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.
இந்நிலையில், இலங்கைக் கிரிக்கெட்டின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து ஐ.சி.சி. நேற்றுக் கூடிக் கலந்தாலோசித்தது.
இதனடிப்படையில் ஐ.சி.சியின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கைக் கிரிக்கெட், தமது கடமைகளைக் கடுமையாக மீறுகிறது என ஐ.சி.சி. தீர்மானித்ததையடுத்து, இலங்கைக் கிரிக்கெட்டை ஐ.சி.சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தி உள்ளது.
மேலும், இலங்கைக் கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை மாற்றுவதற்கு, இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிப்பதுடன், நிர்வாக நடவடிக்கைகளுக்குள் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதனை நிரூபிக்க வேண்டும் எனவும் ஐ.சி.சி. வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

