கடலில் மூழ்கிவரும் துவாலு தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆஸியில் புகலிடம்.

வெப்பம் அதிகரிப்பால் பருவநிலை அகதிகள் படையெடுக்கும் நிலை

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மற்றும் துவாலுக் குடியரசின் பிரதமர் கவுசினா நட்டனோ(Kausea Natano) Photo Mick Tsikas/AP/SIPA பருவநிலை மாற்றத்தினால் பெரிதும் அச்சுறுத்தப்பட்டுவருகின்ற பசுபிக்கின் துவாலு தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஆஸ்திரேலியா புகலிடம் வழங்கும் என்று பிரதமர் அந்தோனி அல்பனீஸ் (Anthony Albanese) இன்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கும் துவாலுக் குடியரசுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட – பாதுகாப்பை உள்ளடக்கிய – உடன்படிக்கை ஒன்றின் கீழேயே துலாலுத் தீவு வாசிகள் ஆஸ்திரேலியாவில்”குடியேறுவதற்கும்” “தொழில் செய்வதற்கும்” “விசேட உரிமையைப்” பெறுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பசுபிக் தீவுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் பின்னணியில் தைவானை ஆதரித்துக் கொண்டு மேற்குலகின் பக்கம் நிற்கின்ற நாடு துவாலுக் குடியரசு ஆகும். தற்போது ஆஸியுடன் செய்துகொண்டுள்ள உடன்பாடிக்கையின் படி துவாலுக் குடியரசு ஆக்கிரமிக்கப்பட்டாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தைச் சந்தித்தாலோ ஆஸ்திரேலியா உடனடியாக உதவி வழங்கும். அதேசமயம் துவாலு மக்கள் ஆஸ்திரேலியாவின் வாழ்க்கை, கல்வி, மருத்துவம், குடும்ப நல சேவைகளைப் பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் என்பதை அது உறுதிப்படுத்துகிறது.

மக்கள் வசிக்கின்ற ஒன்பது தீவுகளை உள்ளடக்கிய துவாலுக் குடியரசு (Republic of Tuvalu) இன்னமும் எண்பது ஆண்டுகளில் (2100 இல் )இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய்விடும் என்று பருவநிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதன் தீவுகள் பலவற்றை ஏற்கனவே கடல் விழுங்கி விட்டது.

ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய்க்கும் இடையே தென் பசுபிக்கில் அமைந்துள்ள இந்தத் தீவுக் கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் மக்கள் மிகவும் வறுமை நிலையில் வசித்து வருகின்றனர்.

பூமியின் வெப்ப நிலை உயர்வின் விளைவுகளால் உலகெங்கும் பருவநிலை அகதிகள் தொகை அதிகரித்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காகத் தஞ்சம் கோருகின்றவர்களை விடப் பருவநிலைப் பாதிப்புகளில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளில் புகலிடம் கோருகின்றவர்களது எண்ணிக்கை அடுத்துவருகின்ற தசாப்தங்களில் அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">