பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்திலணைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது.
பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இச் சுழற்சி முறை போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக வியாழக்கிழமை  கிழக்கு பல்கலைக் கழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களது நிண்ட கால மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை  ஒன்று கூடிய மாணவர்கள் கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்து அவர்களுடன் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதியில் நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கைது செய் கைது செய் அம்பிபிட்டிய தேரரை கைது செய், அடக்காதே, அடக்காதே காவி உடை கொண்டு அடக்காதே, வேண்டும், வேண்டும் நீதி வேண்டும், கைது செய், கைது செய் சூழ்ச்சி காரரை கைது செய், என்பன போன்ற கோஷங்களை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரசிற்கு எதிராக எழுப்பினார்கள்.இதற்கான வன்மையான கண்டனங்களை தெரிவித்ததோடு தமிழ் மக்களது நில ஆக்கிரமிப்பு தொடருமாக இருந்தால் பல்கலைக் கழக மாணவர் என்ற ரீதியில் மக்களுடைய சுதந்திரத்திற்காகவும் நிலங்களை பாதுகாப்புக்காகவும் கவனயிர்ப்பு போராட்டம் தொடரும் என்பதையும் இதற்கொரு முறையான தீர்வொன்றை அரசாங்கமும் அரசும் ஜனாதிபதி பெற்றுத் தருமாறும் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் வடகிழக்கு மாணவர் ஒன்றியம் இணைந்து இதனை விட பாரிய ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு இதற்கான தீர்வினை பெற்றெடுப்போம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள்  தெரிவித்தனர்.

இதன்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறிதரன், முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ப.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.