மேற்கு ஐரோப்பாவை ஸ்தம்பிக்கச் செய்த ‘சியரான்’புயல்! ஆறுபேர் உயிரிழப்பு!!
நெதர்லாந்து, ஸ்பெயின் ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளிலும் அழிவுகள்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
மேற்கு ஐரோப்பாவை மணிக்கு 200 கிலோ மீற்றர்கள் வேகத்தில் கடந்த ‘சியரான்’ புயலினால் பரவலாக அழிவுகள் ஏற்பட்டுள்ளன. பிரான்ஸில் இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
வீதிப் போக்குவரத்துகள் மற்றும் விமானம், பயணிகள் படகுச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பிரான்ஸின் வட மேற்குக் கரையோரத்தில் Brittany இல் காற்றின் வேகம் இதுவரை பதிவான அளவுகளைத் தாண்டி உச்சமாக மணிக்கு 207 கிலோமீற்றர்களாகப் பதிவாகியுள்ளது என்று வானிலை அவதான நிலையமாகிய Meteo-France அறிவித்திருக்கிறது. வடமேற்குக் கடலில் பத்து மீற்றர்கள் முதல் 20 மீற்றர்கள் வரையான உயரத்துக்கு அலைகள் எழுந்து ஆர்ப்பரித்துள்ளன.
பிரான்ஸில் புதன் – வியாழன் இரவுப் பொழுதில் சுமார் 12 லட்சம் வீடுகளது மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இங்கிலாந்தில் முந்நூறுக்கு மேற்பட்ட பாடசாலைகள் நாளை வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டிருக்கின்றன. Devon, Cornwall, Sussex, Surrey மற்றும் Channel Islands பகுதிகள் பெரும் புயல் மற்றும் வெள்ள அழிவைச் சந்தித்துள்ளன.
பிரான்ஸில் இருவர் உயிரிழந்தமையும் எட்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தமையும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடபகுதியில் Aisne மாவட்டத்தில் பார ஊர்தி ஒன்றின் மீது இன்று அதிகாலை மரம் வீழ்ந்ததில் சாரதி உயிரிழந்தார்.
வடக்குப் பிராந்தியமாகிய லூ ஹார்வ் (Le Havre) பகுதியில் கடும் புயலுக்கு மத்தியில் வீட்டு ஜன்னலின் கதவை இழுத்து மூட முயன்ற ஒருவர் காற்றினால் தூக்கி வீசப்பட்டதில் மரணமானார்.
ஜேர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் வீழ்ந்த சம்பவங்களில் தலா ஒவ்வொருவர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிவிட்ட பிறகும் மரங்கள் இலைகளை உதிர்ப்பது தாமதமடைந்துள்ளது. இலையுதிர்காலம் பிந்தியதில் மரங்கள் இன்னமும் இலை குழைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனாலேயே அவை காற்றின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சாய்ந்து பெருமளவில் அழிவடைந்துள்ளன என்று பருவநிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெதர்லாந்தின் Venray நகரத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்தார். ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகிய அம்ஸ்ரடாம் ஷிபோல் (Amsterdam’s Schiphol) விமான நிலையத்தில் 200 விமான சேவைகள் வரை ரத்துச் செய்யப்பட்டன.