தாழமுக்கத்தால் கடும் புயல் மழை எதிர்பார்ப்பு.
புதன், வியாழன் இரு நாள் வடமேற்குப் பகுதிகளைத் தாக்கும் என எச்சரிக்கை.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸின் பல பிரதேசங்களிலும் கடந்த சில நாட்களாக மழை மற்றும் கனத்த மழை பெய்துவருகின்ற நிலையில், “சியரான்” (Ciaran) எனப் பெயரிடப்பட்ட புயல் நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைத் தாக்கவுள்ளது என்று வானிலை அவதான நிலையம் (Météo France) அறிவித்திருக்கிறது.
அத்திலாந்திக் கடலில் நியூபவுண்ட்லான்ட் தீவுக்கு மேற்கே ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக உருவாகியுள்ள”சியரான்” புயல் இந்த வார மத்தியில் – புதன், வியாழக் கிழமைகளில் – பிரான்ஸின் பெருநிலப்பரப்பைக் கடக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்திலாந்திக் கரையோரம் முதல் பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து பிரான்ஸ் அடங்கலாக Brittany, Normandy, Hauts-de-France Center-Val-de-Loire போன்ற பகுதிகளில் புயல்க் காற்றின் தாக்கமும் கடும் மழையும் காணப்படும் என்று வானிலை மையம் (Météo France) எதிர்வு கூறியுள்ளது.
புயல் கடக்கின்ற பகுதிகளில் காற்று மணிக்கு 120 முதல் 140 கிலோ மீற்றர்கள் வரை வேகத்தில் வீசக்கூடும். அத்திலாந்திக் கரைகளில் எட்டு முதல் பத்து மீற்றர்கள் உயரத்துக்கு அலைகள் எழும்பலாம்.
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழையினால் தரைப் பகுதி இளகிக் காணப்படுகிறது. எனவே பெரிய அளவில் புயல் பாதிப்பு இல்லாத இடங்களிலும் கடும் காற்றினால் மரங்கள் சாயலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
புயல் நிலைமை தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வானிலை தொடர்பான மேலதிக முன்னறிவித்தல்கள் விடுக்கப்படும் என்று அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சியரான் புயலின் சீற்றம் தொடர்பாக வானிலை நிபுணர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்ற பதிவுகளில் அது 1999 இல் பிரான்ஸைத் தாக்கிய “லோதர்” (storm Lothar) என்ற புயலின் தாக்கத்தை ஒத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.