வடக்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு : இந்தியா கவலை
வட மாகாணத்தின் மீன்பிடித்துறையில் சீனாவின் பிரசன்னம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் பின்புலத்தில வடக்கு மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய 1500 மில்லியன் ரூபா நிதியை சீனா வழங்கியுள்ளது.
வடக்கு, கிழக்கில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவருவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளிடம் இந்தியா தமது ஆட்சேபனையை பதிவுசெய்துள்ள போதிலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக மீன்பிடித் துறையை மையமாகக் கொண்டு சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. சீனத் தூதுவர் கி லென்ஹோங் 2021இல் வடக்கு மாகாணத்திற்குச் சென்றமை மற்றும் அங்கு மேற்கொண்டிருந்த செயல்பாடுகள் தொடர்பில், இந்தியா கவலையை வெளிப்படுத்தியிருந்தது.
சீனப் தூதுவர் மற்றும் குழுவினர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தியதுடன், உள்ளூர் இந்து பாரம்பரியத்தை பின்பற்றி வேஷ்டி அணிந்து வெறும் மார்போடு நல்லூரில் வழிப்பட்டனர்.யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டு நெறிமுறைகளை ஈர்க்கும் முயற்சியாகவே சீன குழுவினர் இவ்வாறு செயல்பட்டிருந்தனர். இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, அதனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.ஆனால், இந்தியாவின் எதிர்ப்பை கண்டு சீனா பின்வாங்க தயாராக இல்லை. இந்த இரண்டு மாகாணங்களின் மீன்பிடித் துறையில் மேலும் முதலீடு செய்ய சீனா ஆர்வங்காட்டி வருகிறது.
அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போது, ‘பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் பத்தாம் ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறையினரின் நலனுக்காக சீனா ரூ.1500 மில்லியனை உறுதியளித்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதில் ரூ.500 மில்லியனை மீனவர்களின் வீட்டு வசதிக்காகவும் மேலும் ரூ.500 மில்லியனை வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பெற்றுக்கொடுக்கவும் பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.
மீதம் உள்ள ரூ.500 மில்லியனை் மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.