ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு.


அமைச்சரவைத் திருத்தத்தின் மூலம் இலங்கை சுதந்திரக் கட்சிக்கு அமைச்சுப் பதவியையும், இராஜாங்க அமைச்சர் பதவியையும் ஜனாதிபதி வழங்குவதற்கு கட்சி என்ற ரீதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது. அதற்கமைவாக ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தேவைப்படின் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அரசாங்கத்தை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் பலத்தை கொடுப்பவர்கள் பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களே என அதன் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றுநடைபெற்ற பிரதான ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். அதன்படி, சுமார் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்குவது தவறான தூரநோக்கற்ற தீர்மானம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், கட்சி என்ற ரீதியில் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், அவரது தீர்மானத்தினால் கட்சி பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பொதுச்செயலாளர், ஜனாதிபதி தவறு செய்தாலும் தாம் தவறு என்று கூற அஞ்சப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

அவருக்கு ஜனாதிபதி பதவியை கொடுத்து எங்களை இப்படி நடத்தியதற்காக கட்சி என்ற ரீதியில் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்.இன்னுமும் அவருக்கு ஆதரவளிக்காமலிருக்க நாங்கள் கட்சி என்ற ரீதியில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளவில்லை.எனினும் தேவைப்படின் கட்சி என்ற ரீதியில் கலந்துரையாடி எதிர்காலத்தில் அந்த தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் ‘என்று அவர் தெரிவித்தார்.