மோசடியில் ஈடுபட்டவர்கள் நிர்வாக பதவிகளில் இருக்க முடியாது: மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோக செய்கையின் போது மோசடியில் ஈடுபட்ட அமைப்புக்களில் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் நிர்வாக பதவிகளில் இருக்க முடியாது என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த சிறு போக செய்கையின் போது புலிங்க தேவன் முறிப்பு பகுதியில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பங்கு உரிமைகளை குறித்த கமக்கார அமைப்பு தடுத்து அதனை விவசாயிகளுக்கு வழங்காது முறையற்ற விதத்தில் பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
அதாவது அவற்றை மோசடி செய்தமை தொடர்பில் விவசாயிகளால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது .
இவ்வாறு விசாரணைகள் மூலம் குறித்து அமைப்பின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்ற போதும் இந்த அமைப்புகளுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது முறைகேடுகளை மேற்கொண்ட அமைப்புகளை நீக்கி புதிய அமைப்புக்களை தெரிவு செய்வதுடன் குறித்த முறைகேடுகளுக்கு காரணமாக இருந்தவர்கள் ஒருபோதும் பதவியில் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதில் எந்த விதமான அரசியல் தலையீடுகளோ அழுத்தங்களோ இல்லை என்றும் அதிகாரிகள் மட்டதில் குறித்த முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.