நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
இந்திய அணி 48 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கான்வே டக் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ரச்சின் ரவீந்திரன் களமிறங்க நிதானமாக விளையாடிய வில் யங் வெறும் 17 ஓட்டங்கள் எடுத்து நடையை கட்டினார்.
பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் , ரச்சின் ரவீந்திரன் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறி வந்த நிலையில் 34 ஓவரில் முகமது ஷமி ரச்சின் ரவீந்திரன் விக்கெட்டை பறித்து ஜோடியை பிரித்தார். ரச்சின் ரவீந்திரன் 87 பந்தில் 6 பவுண்டரி , 1 சிக்ஸர் உட்பட 75 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய டாம் லாதம் 5 ரன்கள், கிளென் பிலிப்ஸ் 23 ஓட்டங்கள் , மார்க் சாப்மேன் 6 ஓட்டங்கள் , மிட்செல் சான்ட்னர்1 , மாட் ஹென்றி டக் ஆகி விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் சதம் விளாசி 127 பந்தில் 5 சிக்ஸர், 9 பவுண்டரி உட்பட 130 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டைஇழந்து 273 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். 274 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் 4 சிக்ஸர் , 4 பவுண்டரி என 46 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பெர்குசன் தனது முதல் ஓவரின் முதல் பந்திலே ரோஹித் சர்மாவை போல்ட் செய்தார்.
ரோஹித் , சுப்மன் கில் இருவரின் கூட்டணியில் 71 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. அடுத்து கோலி களமிங்கினார். பெர்குசன் தனது 2-வது ஓவரை வீசியபோது சுப்மன் கில் விக்கெட்டை பறித்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் பவுண்டரி மழையாக விளாசினார். இந்திய அணி 100 ஓட்டங்கள் எடுத்தபோது மோசமான வானிலை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலே ஷ்ரேயாஸ் ஐயர் 33 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும்.
இதைத்தொடர்ந்து, கே.எல் ராகுல் களமிறங்க வழக்கம்போல கோலி, கே.எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடினர். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் 63 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய வந்த கே.எல் ராகுல் 27 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வந்த வேகத்தில் 2 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய கோலி 61 பந்தில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் இறங்கிய ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த கோலி நிதானமாக விளையாடினர். இவர்கள் கூட்டணியில் 53 பந்தில் 50 otngal சேர்க்கப்பட்டது.
அரைசதம் அடித்த பின்னர் அதிரடியாக விளையாடிய கோலி சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 104 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 95 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 39* ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 48 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் பெர்குசன் 2 விக்கெட்டையும், டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். புள்ளி பட்டியலில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது. கடைசியாக 2003 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.