ஆசிரியர் படுகொலை பிரான்ஸ் அதிர்ச்சி! எலிஸேயில் மக்ரோன் பாதுகாப்புக் கூட்டம்.
Kumarathasan Karthigesu-பாரிஸ்
செச்சினியத் தாக்குதலாளி பயங்கரவாதப் பின்னணி மற்றொரு தாக்குதல் நடத்தத் தயாரான சகோதரரும் கைது.
பிரான்ஸின் வட கிழக்கே அராஸ் (Arras – Pas-de-Calais) நகரில் பாடசாலை ஒன்றில் நடந்தப்பட்ட பயங்கரவாதப் படுகொலைச் சம்பவம் நாட்டு மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கும் சீற்றத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டு வரும் ஆசிரிய சமூகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செச்சினிய இளைஞர் ஒருவரால் இதே போன்று கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட சாமுவேல் பட்டி என்ற ஆசிரியரது நினைவு நாள்களுக்கு மிக நெருக்கமாக நடைபெற்றிருக்கின்ற இன்றைய படுகொலை நாட்டின் ஆசிரிய சமூகத்தினர் தங்களது பாதுகாப்புத் தொடர்பாக முழுமையாக நம்பிக்கை இழக்கின்ற கட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதல் நடைபெற்ற lycée Gambetta d’Arras பாடசாலைக்கு உடனடியாக விஜயம் செய்த அதிபர் மக்ரோன், “இந்தப் பாடசாலை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனத்தால் தாக்கப்பட்டிருக்கிறது.”-என்று காட்டமாகக் குறிப்பிட்டார். “சாமுவேல் பட்டி படுகொலைசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு – எங்களுக்குப் புரியக்கூடிய ஒரு சூழ்நிலையில் – பயங்கரவாதம் மீண்டும் ஒரு பள்ளியைத் தாக்கியுள்ளது “என்று அவர் அங்கு தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்ட பிறகும் நாட்டுக்குள் தங்கியிருக்கவும் சுதந்திரமாக நடமாடவும் அனுமதிக்கப்பட்ட – வெளிநாட்டுப் பின்னணி கொண்ட – மூன்று சகோதரர்களில் ஒருவரே பாடசாலை ஒன்றுக்குள் வைத்து ஆசிரியரைக் கொடூரமாகப்படுகொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்ததை அடுத்து அரசியல் மட்டங்களில் கோபாவேசமான உணர்வலைகள் வெளிப்பட்டுள்ளன. எதிர்க் கட்சிகளால் அரசு மீது – குறிப்பாக உள்துறை அமைச்சர் மீது – காரசாரமான கடும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் – பாரிஸ் பிராந்தியத்தின் Yvelines பகுதியில் பாடசாலை ஒன்றின் அருகே கத்தியுடன் மற்றொரு தீவிரவாதச் சந்தேக நபர் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவங்களால் நாடெங்கும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் – அதிபர் மக்ரோன் நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்றை இன்று முன்னிரவு வேளை எலிஸே மாளிகையில் கூட்டியிருக்கிறார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள், தேசிய பாதுகாப்புத் தொடர்பிலான தீர்மானங்கள் குறித்த விவரங்கள் இந்தச் செய்தியை எழுதும் வரை வெளியாகவில்லை.
????தாக்குதலாளி யார்?
ஆசிரியரைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்து வேறு இருவரை வெட்டிப் படுகாயப்படுத்திய 20 வயதான முகமது மொகேச்கோவ் (Mohammed Moguchkov) என்ற இளைஞரைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர் .அவர் ரஷ்யாவில் பிறந்தவர். ரஷ்யாவின் பிரதான முஸ்லீம் பிராந்தியமாகிய செச்சினியாவின் (Chechnya) கோகசஸ் பிராந்தியத்தைப் (Caucasus region) பூர்வீகமாகக் கொண்ட அந்த இளைஞர் பிரான்ஸில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்பதைக் குறிக்கின்ற “எஸ் பதிவேட்டில் “(“Fiche S”) இடம்பெற்றிருந்தவர். உள்நாட்டு உளவுப் பாதுகாப்பு சேவைகளால் எலக்ரோனிக் மற்றும் நேரடியான முறைகளில் கண்காணிக்கப்பட்டு (electronic and physical surveillance) வந்தவர். நேற்றைய தினமும் பாதுகாப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதச் செயல் ஒன்றைத் திட்டமிட்ட சமயம் கைது செய்யப்பட்ட அவரது மூத்த சகோதரர் ஒருவர் ஏற்கனவே பாரிஸில் சிறைவைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் 17 வயதான இளைய சகோதரர் ஒருவர் இன்றைய தினம் பாடசாலை ஒன்றில் பிறிதொரு தாக்குதலை நடத்துவதற்குத் தயாராகி இருந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு பயங்கரவாதப் பின்னணி கொண்ட வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடி மேலும் கொடூரச் செயல்களைப் புரிவதற்கு அரசு வாய்ப்ளித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள தீவிர வலதுசாரிக் கட்சி, அதற்காக உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் வந்து பொறுப்புக் கூறவேண்டும் என்று கோரியிருக்கிறது.